இந்தியாவில் நவம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 33 சூப்பர் கம்ப்யூட்டர்கள் செயல்பாட்டில் இருக்கின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வழக்கமான கம்ப்யூட்டர்களை விட சூப்பர் கம்ப்யூட்டர்கள் 1,000 மடங்கு வேகமாக இயங்கும்.
சாதாரண கம்ப்யூட்டர்கள் ஆண்டு கணக்கில் செய்யும் பணிகளை, சூப்பர் கம்ப்யூட்டர்கள் சில நிமிடங்களில் செய்து முடிக்கும். எனவே முக்கியமான ஆய்வு பணிகளுக்கு எல்லாம் இவை மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். இந்தியாவில் இதற்காகவே அரசு தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 33 சூப்பர் கம்ப்யூட்டர்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மொத்தமாக 32 Petaflop திறன் கொண்ட 33 சூப்பர் கம்ப்யூட்டர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கணினியின் வேகத்தை கணக்கீடு செய்யக்கூடிய அலகு தான் Petaflop.
மத்திய மின்னணு மற்றும் ஐடி துறை அமைச்சரான ஜிதின் பிரசாத் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்நாட்டிலேயே சூப்பர் கம்ப்யூட்டர்களை வடிவமைப்பது, மேம்படுத்துவது மற்றும் உற்பத்தி செய்வது தொடர்பான தொழில்நுட்பங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
எனவே சூப்பர் கம்ப்யூட்டிங்கிற்கு தேவையான தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவைகாக நாம் வெளிநாட்டை சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லை என்றார்.
கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 3 சூப்பர் கம்ப்யூட்டர்களை நாட்டிற்காக அர்ப்பணம் அர்ப்பணித்தார். PARAM Rudra என பெயரிடப்பட்ட இந்த மூன்று சூப்பர் கம்ப்யூட்டர்களும் ஆயிரம் இளம் ஆராய்ச்சியாளர்கள், அறிவியல் வல்லுனர்கள், பொறியாளர்களுக்கு இயற்பியல் , புவி அறிவியல் மற்றும் காஸ்மாலஜி உள்ளிட்ட துறைகளில் ஆய்வு செய்வதற்கு தேவையான வசதிகளை வழங்கும் என சொல்லப்பட்டது.
இந்த மூன்று சூப்பர் கம்ப்யூட்டர்களும் புனே, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள அரசின் ஆய்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. எனவே நாட்டில் இதுவரை மொத்தமாக 33 சூப்பர் கம்ப்யூட்டர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இவை அனைத்தும் ஐஐடி உள்ளிட்ட பிரதான கல்வி நிறுவனங்களிலும் பிரதான ஆய்வு நிறுவனங்களிலும் தற்போது பயன்பாட்டில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலக அளவில் அமெரிக்காவில் தான் அதிகபட்சமாக சூப்பர் கம்ப்யூட்டர்கள் நிறுவப்பட்டு பயன்பாட்டில் இருக்கின்றன. மொத்தமாக அமெரிக்காவில் இருக்கும் சூப்பர் கம்ப்யூட்டர்களின் வேகம் என்பது 6475 Petaflop ஆக இருக்கிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதன்முறையாக மத்திய அரசு தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் திட்டத்தை அமல்படுத்தியது இதற்காக 4500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications