சென்னை: இந்தியாவில் தற்போது நீரிழிவு நோய் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக இளம் வயதினர் மத்தியில் நீரிழிவு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் நீரிழிவு நோய் தொடர்பான சிகிச்சைகளை இன்னும் மேம்படுத்தக் கூடிய வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாக நீரிழிவு நோயாளிகளுக்கான பயோ பேங்க் சென்னையில் நிறுவப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சில ஆராய்ச்சி அமைப்பான ஐசிஎம்ஆர் மற்றும் சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையான எம்டிஆர்எஃப் ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து இந்தியாவின் முதல் நீரிழிவு உயிரி வங்கியை சென்னையில் அமைத்துள்ளன. பயோ பேங்க் எனப்படும் இந்த அமைப்பு சென்னை எம்டிஆர்எஃப் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

நீரிழிவு நோய்க்கான காரணங்கள், இந்தியாவில் எந்தெந்த வகை நீரிழிவு நோய்கள் இருக்கின்றன என்பன உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்காக உயிர் மாதிரிகளை சேகரிப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் இந்த வங்கி உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிக எண்ணிக்கையில் உயர் ரத்த சக்கரை அளவு கொண்ட மக்கள் வசிக்கக்கூடிய இரண்டாவது நாடு இந்தியா என சொல்லப்படுகிறது.
இந்தியாவில் தற்போது இளம் வயதினர் மத்தியில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாம்.
அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு தரவின்படி பார்க்கும்போது இந்தியாவில் சுமார் 10 கோடிக்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள் இருக்கின்றனர். சுமார் 13.6 கோடி பேர் நீரிழிவு நோய் வருவதற்கான ப்ரீ டயாபட்டிக் நிலையில் இருக்கின்றனர்.
நாளுக்கு நாள் இந்த பிரச்சனை அதிகரித்து வரக்கூடிய நிலையில் ஐசிஎம்ஆர் ஆதரவுடன் இந்த பயோ வங்கி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயோ வங்கியின் நோக்கம் நாடு முழுவதும் இருக்கும் நீரிழிவு நோயாளிகளின் உயிரி மாதிரிகளை சேகரித்து வைத்து அவர்களின் ஜெனிடிக் சார்ந்த ஆய்வு, வாழ்க்கை முறை சம்பந்தப்பட்ட ஆய்வு மற்றும் சுற்றுப்புற சூழல் சம்பந்தப்பட்ட ஆய்வு என மூன்று வகைகளில் ஆய்வுக்கு உட்படுத்தி எதனால் அவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்கிறது தற்போது வழங்கக்கூடிய சிகிச்சை முறையை எப்படி இன்னும் மேம்படுத்தலாம் என்பன உள்ளிட்ட ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது.
தற்போதைக்கு இந்த பயோ பேங்கில் 1.2 லட்சம் நபர்களின் மாதிரிகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இதனைக் கொண்டு நீரிழிவு நோய் சம்பந்தப்பட்ட முக்கியமான ஆய்வு நடத்த இருப்பதாக சொல்லப்படுகிறது.
சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு வெளியிடக்கூடிய தகவலின் படி 2045 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 134 மில்லியன் இந்தியர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக மாரடைப்பு, பக்கவாதம், கிட்னி, செயலிழப்பு, உறுப்புகள் சேதமடைவது, கோமாநிலைக்கு செல்வது என பல்வேறு பிரச்சனைகளை மக்கள் சந்திக்க வேண்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications