நம் நாட்டில் தங்கம் உற்பத்தி பெயரளவுக்கே உள்ளது. இதனால் உள்நாட்டு தங்க தேவை இறக்குமதி வாயிலாக பூர்த்தி செய்யப்படுகிறது. துபாயிலிருந்து கணிசமாக அளவு தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த சூழ்நிலையில், தங்கம் மற்றும் வெள்ளியை செதுக்கப்படாத, பாதியளவு தயாரிக்கப்பட்ட மற்றும் பவுடர் வடிவில் இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம்
இதன்படி, இந்தியா-ஐக்கிய அரபு அமீரக விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தின் கீழ், பரிந்துரைக்கப்பட்ட முகவர் நிலையங்கள், தகுதிவாய்ந்த நகைக்கடைக்காரர்கள் மற்றும் செல்லுபடியாகும் வரி விகித ஒதுக்கீட்டாளர்கள் மூலம் மட்டுமே துபாயிலிரு்து தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டும்.

சில இறக்குமதியாளர்கள் சுங்க வகைப்பாடுகளில் உள்ள தெளிவின்மைகளை பயன்படுத்தி துபாயிலிருந்து கிட்டத்தட்ட சுத்த தங்கத்தை பிளாட்டினம் கலவை என்ற போர்வையில் கொண்டு வந்ததாக செய்திகள் வெளியானது. மேலும், தங்கத்தை பிளாட்டினம் என்று தவறாக அறிவித்ததன்மூலம், சிஇபிஏ-ன் கீழ் வழங்கப்படும் குறைந்த இறக்குமதி வரிகளை அவர்கள் பெற முடிந்தது.
எச்எஸ் குறியீடு
இதனை தடுக்க, மத்திய அரச 99 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட சுத்தமான பிளாட்டினத்தை கொண்ட பிளாட்டினத்திற்காக ஒரு புதிய HS (ஹார்மோனைஸ்டு சிஸ்டம்) குறியீட்டை அறிமுகப்படுத்தியது. இந்த வகை இறக்குமதிகள் மட்டுமே ஒப்பந்தத்தின் கீழ் வரி சலுகைகளுக்கு தகுதி பெறும். பிற பிளாட்டினம் சார்ந்த உலோக கலவைகள் அல்லது கலவைகள் இறக்குமதிகளுக்கு வரி சலுகைகள் கிடையாது
மத்திய அரசின் இந்த நடவடிக்கை, பிளாட்டினம் போல் மாறுவேடமிட்டு தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான வழியை அடைத்தது. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், பிளாட்டினம் என்ற பெயரில் தங்க இறக்குமதிகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தனித்தனி எச்எஸ் குறியீடுகளை உருவாக்குவதற்கான பட்ஜெட் அறிவிப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தங்க டோர்
2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தங்க டோர் (அரை சுத்திகரிக்கப்பட்ட தங்க கலவை), வெள்ளி டோர் மற்றும் பிளாட்டினம் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களுக்கு பிரத்யேக எச்எஸ் குறியீடுகளை உருவாக்க முன்மொழியப்பட்டது. வரி கட்டமைப்புகளை சீரமைக்கும் போது இறக்குமதிகளை சிறப்பாக ஒழுங்குபடுத்துவதும் கண்காணிப்பதும் இதன் நோக்கமாகும்.
இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (சிஇபிஏ) கடந்த 2022 மே முதல் நடைமுறையில் உள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, வரி விகித ஒதுக்கீட்டின் (டிஆர்கியூ) கீழ் 1 சதவீத வரி சலுகையுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து ஆண்டுதோறும் 200 டன் தங்கத்தை இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டது.


Click it and Unblock the Notifications