ஈரான் போர் காரணமாக இந்தியாவில் கடந்த மே மாதத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலைகள் ஐந்து முறைக்கு மேல் உயர்த்தப்பட்டு விட்டன. பெட்ரோல் , டீசல் விலை உயர்வு என்பது நேரடியாகவே கோடிக்கணக்கான சாதாரண மக்களின் பட்ஜெட்டிலேயே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது மட்டுமில்லாமல் சரக்கு போக்குவரத்துக்கான செலவுகளும் கூடி பால் , மளிகை என அத்தியாவசிய பொருட்களின் விலைவாசிகளும் இதன் காரணமாக உயர்ந்திருக்கின்றன.
ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் சப்ளை நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் மார்ச் மாதத்தில் இருந்து வளைகுடா நாடுகளிடமிருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வினியோகம் நின்று போய் இருக்கிறது. உலக சந்தையிலும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பதால் இந்தியாவை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் ,மற்றும் எச்பி உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மே மாதத்தில் இருந்து பெட்ரோல் டீசல் விலைகளை படிப்படியாக உயர்த்திய வண்ணம் இருக்கின்றன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தங்களுடைய மாதாந்திர பட்ஜெட்டிலேயே கை வைத்து விட்டது என சாமானிய மக்கள் புலம்பி வருகின்றனர். இந்த சூழலில் தான் இந்தியாவில் 85% எத்தனால் கலந்த பெட்ரோல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது வழக்கமான பெட்ரோல் விலையை விட இது 20 ரூபாய் விலை குறைவாக இருக்கிறது.
மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, ' E- 85' எனப்படும், 85 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் வினியோகிக்கும் நாட்டின் முதல் நிலையத்தை திறந்து வைத்தார். இங்கே ' E- 85' பெட்ரோலின் விலை லிட்டர், 82 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மத்திய அரசு, கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு செலவிடும் டாலரை குறைக்க பெட்ரோலில், எத்தனால் கலக்கும் திட்டத்தை சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியது. தற்போது பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனால் கலக்கப்படுகிறது. இந்த எத்தனால், கரும்பு பாகு கழிவு மற்றும் சோளம், அரிசி, சேதமடைந்த தானியங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. எத்தனால் கலப்பு பெட்ரோல் சுற்றுச்சூழல் மாசையும் குறைக்க கூடியது.
தற்போது பெட்ரோலில் எத்தனால் கலப்பை, 85 சதவீதம் வரை மத்திய அரசு அதிகரிக்க துவங்கியுள்ளது. அதற்கு ஏற்ற வகையிலன பைக் மற்றும் கார்கள் தயாரிப்பில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் இறங்கியுள்ளன. அண்மையில் கூட ஹீரோ மோட்டார் சைக்கிள் நிறுவனம், ' E- 85' பெட்ரோலில் இயங்க கூடிய பைக்குகளை அறிமுகம் செய்தது. அதே போல் மாருதி சுசூகி நிறுவனமும், ' E- 85' இல் இயங்க கூடிய, 'வேகன் ஆர்' காரை அறிமுகப்படுத்தியது.

நாடு முழுவதும் ' E- 85' பெட்ரோல் வினியோகிக்கும் இயந்திரங்களை பெட்ரோல் நிலையங்களில் நிறுவும் பணிகள் வேகமெடுத்துள்ளன.டெல்லியில் வழக்கமான பெட்ரோல் விலை லிட்டர், 102.12 ரூபாயாக உள்ள நிலையில், ' E- 85' பெட்ரோல் விலை லிட்டருக்கு, 20 ரூபாய் குறைவாக 82.12 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு குடும்பம் சராசரியாக வீட்டில் உள்ள பைக், கார்களுக்கு மாதத்திற்கு 15 லிட்டர் பெட்ரோல் பயன்படுத்துகிறது என்றால் இந்த 85% எத்தனால் பெட்ரோலை பயன்படுத்தும் போது 300 ரூபாய் வரை சேமிக்கலாம்.
எத்தனால் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது என்பதால் பெட்ரோலுக்காக இந்தியா வெளிநாடுகளை சார்ந்திருக்கும் போக்கு பெருமளவு குறையும். மேலும் குறைந்த விலையில் மக்களுக்கு எரிபொருட்கள் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறது மத்திய அரசு.


Click it and Unblock the Notifications

