சென்னை: சாட் ஜிபிடி எனப்படும் உரையாடல் அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு செயலி உலகையே ஆட்டுவித்து வருகிறது. இப்படி ஏஐ புரட்சியை ஏற்படுத்திய சாட்ஜிபிடி-ஐ அதிகம் பயன்படுத்துவது எந்த நாடு என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
இந்தியர்கள் தான் உலகிலேயே அதிகபட்சமாக சாட்ஜிபிடி-ஐ பயன்படுத்துகிறார்களாம். விசுவல் கேப் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி 45% மக்கள் இந்தியாவில் சாட்ஜிபிடியை பயன்படுத்துகிறார்களாம். இந்தியாவில் ஐடி துறை சார்ந்த பணியாளர்கள் அதிகம் என்பதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

மொரோக்கோவில் 38% , ஐக்கிய அரபு அமீரகத்தில் 34%, அர்ஜெண்டினா, பிரேசில், இந்தோனேசியாவில் 32% தென் ஆப்ரிக்காவில் 31% என சாட் ஜிபிடி பயன்பாடு இருக்கிறது. பிலிப்பைன்ஸ், ஸ்வீடன், தென் கொரியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இது 21 முதல் 30%க்குள் இருக்கிறது. சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இந்த சதவிகிதம் 18 மற்றும் 19 என இருக்கிறது.
அமெரிக்காவின் பாஸ்டனை சேர்ந்த ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வின் படி தான் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இளம் வயதினர் அதிகமாக இருக்கும் நாடுகளில் தான் சாட் ஜிபிடியின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது என்கிறது இந்த அறிக்கை.
குறிப்பாக தங்களுடைய வேலைகளில் சாட் ஜிபிடியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதாம். அதே வேளையில் அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் சாட் ஜிபிடியை பொழுது போக்குக்காக பயன்படுத்துபவர்கள் தான் அதிகம்.
ஓபன் ஏஐ என்ற நிறுவனம் அறிமுகம் செய்த சாட் பாட் அடிப்படையிலான சாட் ஜிபிடி உலகளவில் பலரும் பயன்படுத்தும் ஒரு ஏஐ கருவி. இதற்கு போட்டியாக கூகுள் அறிமுகம் செய்த ஜெமினி இதற்கு நிகராக நிற்க முடியவில்லை. கவிதை, புதிர், சாஃப்ட்வேர் கோடிங், சிறு தொழில் செய்யும் வழிகாட்டி, யூடியூப் சேனல் ஐடியா என நாம் எதை கேட்டாலும் தன்னிடம் இருக்கும் தரவுகளை அடிப்படையாக கொண்டு பதில் அளிக்கும்.
மனிதர்கள் எப்படி பேசுகிறாமோ, எப்படி எழுதுகிறாமோ அதை அப்படியே புரிந்து கொள்ளும் வல்லமை படைத்தது இந்த சாட் ஜிபிடி. நாம் கேட்கும் கேள்விகளுக்கு உரைநடை மாதிரி நீண்ட வாக்கியங்களை விடையாக தர முடியும் என்பதாலேயே பெரும்பாலானவர்கள் இதனை பயன்படுத்த காரணமாக இருக்கிறது.
மொத்தமாக சர்வேயில் கலந்து கொண்டவர்களில் 40% பேர் ஏஐ பற்றி ஆர்வத்தை வெளிப்படுத்தினார்களாம், 29% பேர் இதனால் தங்களின் வேலை பாதிக்கப்படும் என கவலை தெரிவித்துள்ளனராம்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications