மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் மோதல் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு (எல்பிஜி) விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி கிட்டத்தட்ட மூடப்பட்டுள்ளதால், கத்தார் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து வரும் எல்பிஜி ஏற்றுமதி வாராந்திர அளவில் 30 சதவீதம் குறைந்துள்ளது.
இதனால் மத்திய அரசு எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் ஏற்கனவே 21 நாள் கட்டுப்பாட்டை விதித்திருக்கும் வேளையில் முக்கியமான கட்டுப்பாட்டை ஒவ்வொரு மாநிலமும் அறிவித்து வருகிறது. தற்போது மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எரிவாயு நிறுவனங்கள் வீட்டு பயன்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்து, வணிக ரீதியான எல்பிஜி விநியோகம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

எல்பிஜி விலை ஏற்கனவே உயர்ந்துள்ளது, 19 கிலோ வணிக சிலிண்டர் ரூ.115-ஆகவும், 14.2 கிலோ வீட்டு சிலிண்டர் ரூ.60-ஆகவும் மார்ச் 7 முதல் உயர்ந்துள்ளது. இருப்பினும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராது என்று அரசு வட்டாரங்கள் உறுதியளித்துள்ளன.
இந்த நிலையில் தற்போது எல்பிஜி விலை உயர்த்தப்பட்டதை தாண்டி வர்த்தக ரீதியாக பயன்படுத்தும் சிலிண்டர்களின் விநியோகத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் இயங்கும் ஹோட்டல்கள் தற்காலிகமாக சேவையை நிறுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

தமிழ்நாடு டூ ஹிமாச்சல்
பஞ்சாபில் மார்ச் 8 முதல் வணிக எல்பிஜி சிலிண்டர்கள் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. 19 கிலோ மற்றும் பெரிய தொழில்சார் சிலிண்டர்கள் இதில் அடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வீட்டு விநியோகத்தை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து மகாராஷ்டிராவில் நாக்பூர், புனே, மும்பை ஆகிய இடங்களில் வணிக எல்பிஜி விநியோகம் கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் சுமார் 9,000 உணவகங்கள் மற்றும் பார் சேவைகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவில் பல மாவட்டங்களில் புதிய வணிக சிலிண்டர்கள் ஒதுக்கீடு நிறுத்தப்பட்டுள்ளது. ஹோட்டல்கள் மற்றும் சிறு உணவகங்கள் பெரும் நெருக்கடியை சந்திக்கின்றன.
தெலங்கானாவில் ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் வணிக எல்பிஜி சிலிண்டர் டெலிவரிக்காக அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் புதிய வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
ஹிமாச்சல் பிரதேசத்தில் புதிய சிலிண்டர் 25 நாட்களுக்குப் பிறகு மட்டுமே பதிவு செய்ய முடியும். கொல்கத்தாவில் 21 நாட்கள் இடைவெளி விதி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பற்றாக்குறையை கட்டுப்படுத்த, அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் அவசர விதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்திய ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் ப்ரோப்பேன் மற்றும் பியூட்டேன் போன்றவற்றை வீட்டு சிலிண்டர்களுக்கு நிரப்ப முன்னுரிமை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. வணிக பயன்பாட்டு சிலிண்டருக்கு நிரப்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications