இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் டாலரின் ஆதிக்கத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் வேளையில் இந்த வலையில் சிக்காமல் தப்பித்துக்கொள்ள இந்தியா வர்த்தகம் செய்யும் நாடுகள் உடன் உள்நாட்டு நாணயத்தில் பேமெண்ட் செலுத்துவதற்கான முயற்சிகள் பல வருடங்களாக எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மத்திய கிழக்கு நாட்டிலிருந்து ஒரு மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை வாங்குவதற்கு இந்தியாவின் டாப் சுத்திகரிப்பு நிறுவனமான இந்தியன் ஆயில் ரூபாயில் பேமெண்ட் செலுத்துவதன் மூலம் இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ம் புதிய பாதையை அமைத்துள்ளது.

இரு நாடுகளும் உள்ளூர் நாணயங்களில் இருதரப்பு வர்த்தகத்திற்கு பேமெண்ட் செலுத்துவதன் மூலம் டாலரின் அவசியம் மறைந்துள்ளது என இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. BRICS மற்றும் பல தென்கிழக்கு நாடுகள் உள்நாட்டு நாணயங்களின் பேமெண்ட் முறையை தற்போது பயன்படுத்த துவங்கியுள்ளது
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியன் ஆயில் கார்ப் நிறுவனம், அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனத்திற்கு (ADNOC) ரூபாய் நாணயத்தில் பேமெண்ட் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு தங்க ஏற்றுமதியாளர் சுமார் 25 கிலோ தங்கத்தை இந்தியாவில் இருக்கும் ஒரு வியாபாரிக்கு சுமார் 12.84 கோடி ரூபாய்க்கு ரூபாய் நாணயத்தில் செலுத்தினார். இது இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மத்தியில் புதிய வர்த்தக பாதையை திறந்துள்ளது.
சர்வதேச வர்த்தகத்திற்கு அமெரிக்க டாலருக்குப் பதிலாக ரூபாயில் வர்த்தகத்தைத் தீர்த்துக்கொள்ள அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் ஜூலை மாதம் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அரசுகள் கையெழுத்திட்டது. இதை தொடர்ந்து தான் இந்தியன் ஆயில் பரிமாற்றம் நடந்துள்ளது. அமெரிக்க டாலர் மாற்றங்களை நீக்குவதன் மூலம் பரிவர்த்தனை செலவுகளைக் குறைக்கும், இது இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு வர்த்தகத்திலும், நாணய மதிப்பிற்கும் பெரிய பலன் அளிக்கும்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தின் போது, எல்லை தாண்டிய பணப் பரிமாற்றத்தை எளிதாக்கும் வகையில், நிகழ்நேர கட்டண இணைப்பை (real-time payment link) அமைக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான இருதரப்பு வர்த்தகம் 2022-23 ஆம் நிதியாண்டில் 84.5 பில்லியன் டாலர்களாக இருந்தது.


Click it and Unblock the Notifications