ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் தயாரிப்புகளை பல்வேறு நாடுகளில் தயாரித்து வருகிறது. இதற்கு முன்பு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களை இங்கிலாந்து, துருக்கி, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த திட்டத்தை மாற்றியமைத்து இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பாமல், அமெரிக்காவிற்கு அனுப்ப ஆப்பிள் முடிவு செய்துள்ளது. இது ஜூன் மாதம் முதல் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை காரணம், அமெரிக்காவில் விதிக்கப்படும் இறக்குமதி வரி தான். அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி முறையைக் கொண்டு வந்துள்ளார். பரஸ்பர வரி என்பது எந்தெந்த நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுகிறதோ? அந்தந்த நாடுகள் விதிக்கும் வரியைப் பொறுத்து அமெரிக்காவும் வரி விதிக்கும்.

இதன் காரணமாகத்தான் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஐபோன்களை அனுப்ப ஆப்பிள் திட்டமிட்டுள்ளது என்று தொழில்துறை அதிகாரிகள் மற்றும் சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வரிகளின் தாக்கத்தை குறைக்கும் நோக்கில் இந்தியாவில் தனது உற்பத்தியை அதிகரிக்கவும் ஆப்பிள் செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே அதிக அளவில் ஐபோன்களை உற்பத்தி செய்து, அங்கிருந்து நேரடியாக அமெரிக்காவுக்கு அனுப்புவதன் மூலம் அமெரிக்காவில் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்படும் அதிகப்படியான வரியை தவிர்க்க முடியும் என்று எண்ணி ஆப்பிள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
2024-ஆம் ஆண்டில் மட்டும் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் சுமார் 40 முதல் 45 மில்லியன் வரையிலான ஐபோன்களை உற்பத்தி செய்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் பல நாடுகளில் உற்பத்தி ஆலையைக் கொண்டுள்ளது. இருப்பினும் உலக அளவில் இந்தியாவில் செய்யப்படும் உற்பத்தி 18 முதல் 20 சதவீதமாக உள்ளது. இதில் 14 முதல் 15 மில்லியன் ஐபோன்கள் அமெரிக்காவிற்கும், 13 மில்லியன் பிற சர்வதேச நாடுகளுக்கும், 12 மில்லியன் இந்திய சந்தையில் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்கள் இத்தாலி, செக் குடியரசு, ஜப்பான், துருக்கி, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்கும் ஆப்பிள் அனுப்பி வைக்கிறது. ஆப்பிளின் கூட்டாளர் நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் இந்தியச் தொழிற்சாலைகளின் திறன்களை விரிவுபடுத்த புதிய ஆலைகளை அமைத்து வருகின்றனர்.
ஜூன் காலாண்டில் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் இருந்து பெறப்படும் என்று ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் கூறியுள்ளார். அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் கிட்டத்தட்ட அனைத்து ஐபாட்கள், மேக்புக்ஸ், ஆப்பிள் வாட்ச்கள் மற்றும் ஏர்போட்கள் வியட்நாமில் தயாரிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications