இந்திய பொருளாதார, வேலைவாய்ப்பு, ஏற்றுமதி, ரூபாய் மதிப்பு என அனைத்திலும் உற்பத்தி துறை முக்கிய பங்கு வகிக்கும் வேளையில், ஒவ்வொரு மாதமும் நாட்டின் உற்பத்தி துறை வளர்ச்சி பாதையில் இருக்க வேண்டியது அவசியமானதாகவும், முக்கியமானதாகவும் மாறியுள்ளது.
கடந்த நிதியாண்டின் சிறப்பான செயல்பாட்டைத் தொடர்ந்து, இந்திய உற்பத்தித் துறை ஏப்ரல் மாதத்திலும் சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த 3.5 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகப்படியான வளர்ச்சியை உற்பத்தித் துறை PMI குறியீடு பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வலுவான தேவை காரணமாக இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று ஒரு தனியார் நிறுவனத்தின் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. பொதுவாக வெயில் காலத்தில் நாட்டின் உற்பத்தி பாதிக்கப்படும் வேளையில் ஏப்ரல் மாத வளர்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது.
எச்எஸ்பிசி இந்தியா உற்பத்தி கொள்முதல் மேலாண்மை குறியீட்டு (PMI) - ஐ அடிப்படையாகக் கொண்டு எஸ்&பி குளோபல் நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, ஏப்ரல் மாதத்திற்கான இந்தியாவின் உற்பத்தி PMI குறியீடு 58.8 ஆக உள்ளது. இது 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை பதிவான இரண்டாவது அதிகப்படியான வளர்ச்சி அளவாகும்.
மார்ச் மாதத்தில் 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகப்படியான 59.1 என்ற அளவீட்டைத் தொட்ட நிலையில், ஏப்ரல் மாதமும் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
"ஏப்ரல் மாதத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடமிருந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான வலுவான தேவையை இந்திய உற்பத்தியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் மொத்த புதிய ஆர்டர்கள் அளவு எண்ணிக்கையும் உயர்ந்தன. இந்த உற்பத்தி விரிவாக்கத்தின் வேகம் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை இரண்டாவது உச்சக்கட்ட நிலை" என்று எஸ்&பி குளோபல் நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகளவில் பணவீக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் உற்பத்தி பொருட்களின் செலவு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாகப் பணவீக்கம் ஜனவரி மாதத்திற்குப் பிறகு மிக உயர்ந்த நிலையை ஏப்ரல் மாதத்தில் அடைந்த நிலையிலும் ஆயினும் நாட்டின் உற்பத்தி தொடர் வளர்ச்சிப் பாதையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
400 உற்பத்தியாளர்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த PMI அளவீடுகள் கணக்கிடப்பட்டு உள்ளது. மத்திய அரசின் அதிகப்படியான அரசு செலவீடுகள் காரணமாக நாட்டின் உற்பத்தி, சுரங்கம் மற்றும் கட்டுமான துறைகள் வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக டிசம்பர் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.4% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications