உலகளவில் பெரும் பணக்காரர்களின் விருப்ப நகரமாக மாறியிருக்கும் துபாயில் கார் விலை குறைவாக இருப்பதால் அதிகப்படியானோர் ரோல்ஸ் ராய்ஸ், லம்போர்கினி கார்களை அசால்ட்டாக வாங்குகின்றனர். ஆடம்பர கார் உரிமையாளர்கள் மத்தியில் தனித்து நிற்க வேண்டும் என்றால் துபாயில் நம்பர் பிளேட் வாயிலாக தான் வித்தியாசம் காட்ட முடியும்.
சிங்கிள் டிஜிட் எண் கொண்ட நம்பர் பிளேட் பல நூறு கோடி மதிப்பில் ஏலம் மூலம் வாங்கப்படுகிறது. இதேபோன்ற டிரெண்ட் இந்தியாவிலும் தற்போது அதிகரித்து வருகிறது.

ஹரியானா மாநிலத்தில் ஒரு வாகனப் பதிவு எண்ணுக்கு ரூ.1.17 கோடி கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. 'HR88 B8888' என்ற இந்த எண் இந்தியாவிலேயே இதுவரை அதிக விலைக்கு ஏலம் போன விஐபி எண்ணாக மாறியுள்ளது. முழுக்க முழுக்க இணையத்தில் நடந்த ஏலத்தில் 45 பேர் போட்டியிட்டனர். இன்று (நவம்பர் 26) மாலை 5 மணிக்கு ஏலம் முடிவடைந்த நிலையில் இந்தப் புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
1.17 கோடி ரூபாய் விலையில் நம்பர் பிளேட் வாங்குவது என்பது சாதாரண மக்களுக்கு இது ஆச்சரியமாக இருந்தாலும், செல்வந்தர்களுக்கு தங்கள் காரை தனித்துவமாகக் காட்ட இது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாக மாறிவிட்டது. தமிழ்நாட்டில் இதுப்போன்று வி.ஐ.பி. வாகன எண் வாங்குவது எப்படி தெரியுமா..? செய்தியின் இறுதியில் விளக்கமாக கொடுக்கப்பட்டு உள்ளது.
எட்டு எட்டு எட்டு - அதிர்ஷ்டமும் செல்வமும் தரும் எண்
'HR88B8888' என்ற எண்ணின் சிறப்பு அதன் தோற்றத்திலேயே உள்ளது. 'B' என்ற எழுத்து எட்டு போலத் தெரிவதால், மொத்த எண்ணும் எட்டு எட்டு எட்டு எட்டு என பார்க்கும் போது தெரிகிறது. இதேபோல் எட்டு என்ற எண் பல கலாச்சாரங்களில் அதிர்ஷ்டமும் செல்வமும் தரும் எண்ணாகக் கருதப்படுகிறது.
HR என்றால் ஹரியானா மாநிலக் குறியீடு, 88 என்றால் அந்தப் பகுதியின் ஆர்டிஓ அலுவலகக் குறியீடு, B என்றால் வாகனத் தொடரைக் குறிக்கிறது, கடைசியில் 8888 என்றால் தனித்துவமான நான்கு இலக்க எண்.
ஏலத்தின் தொடக்க விலை வெறும் 50 ஆயிரம் ரூபாய் தான். ஆனால் ஏலம் துவங்கி சில மணிநேரத்தில் 88 லட்சம் ரூபாயைத் தொட்டது. மாலைக்குள் 1.17 கோடி ரூபாயாக உயர்ந்தது. கடந்த வாரம்தான் 'HR22W2222' என்ற எண் 37.91 லட்ச ரூபாய்க்கு போனது.
தமிழ்நாட்டில் வி.ஐ.பி வாகன எண் எப்படிப் பெறுவது?
தமிழ்நாட்டில் இரண்டு வகையான வி.ஐ.பி. எண்கள் கிடைக்கின்றன,
1. அரசு ஒதுக்கீடு செய்த ஃபேன்ஸி எண்கள் → 0001, 1111, 5005, 1234 போன்றவை
2. Open Series எண்கள் → 1122, 1212, 1222 போன்ற எண்கள்
இரண்டுக்கும் கூடுதல் ஃபேன்ஸி/முன்பதிவுக் கட்டணம் செலுத்தினால் யாரும் விண்ணப்பிக்கலாம்.
வி.ஐ.பி எண் பெறுவதற்கான வழிமுறைகள்:
- முதலில் https://parivahan.gov.in என்ற போக்குவரத்து அமைச்சக இணையதளத்துக்குச் செல்லவும்.
- "User Other Services" → "All Available Numbers" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- அதன் பின் தமிழ்நாடு, அடுத்தாக உங்களது ஆர்டிஓ அலுவலகம், "Open Series" எனத் தேர்வு செய்யவும்.
- இதில் 0001 முதல் 9999 வரையிலான கிடைக்கும் எண்களைப் பார்க்கலாம்.
- அன்றைய தொடர் எண் (running number) எது என்பதைத் தெரிந்துகொள்ள உங்கள் ஆர்டிஓ அலுவலகத்தைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக்கொள்ளவும். பிடித்த எண்களை முதலில் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள்.
- பின்னர் உங்கள் ஆர்டிஓ அலுவலகத்திற்கு நேரில் சென்று பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும்:
- விலக்கு அறிக்கைப் படிவம் (Disclaimer Form)
- அடையாளச் சான்று (ID Proof)
- நிறுவனம் சார்பில் வாங்கினால் ஜிஎஸ்டி சான்றிதழ்
- கையொப்பமிட்ட கோரிக்கைக் கடிதம்
- எண் ஒதுக்கீட்டுப் படிவம்
- ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு உங்களுக்கு ஒரு லாகின் ஐடியும் பாஸ்வேர்டும் கொடுப்பார்கள். அதை வைத்து பரிவாஹன் இணையதளத்தில் உள்நுழையவும்.
- உள்நுழைந்ததும் "Pay Reserve Fee" → "Unique ACK Number" எனத் தேர்ந்தெடுத்து, நீங்கள் விரும்பிய எண்ணைத் தேர்வு செய்யவும். படிவம் தானாக நிரம்பிவிடும்.
- கட்டணத்தை யூ.பி.ஐ., நெட் பேங்கிங், ரூபே டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் செலுத்தவும் (கிரெடிட் கார்டுக்கு சிறிது கூடுதல் கட்டணம் இருக்கலாம்).
- கட்டணம் செலுத்தியவுடன் அந்த எண் உங்கள் வாகனத்துடன் இணைக்கப்பட்டுவிடும். வாகனப் பதிவு மற்றும் ஆய்வின் போது ஆர்டிஓ அதே எண்ணையே உங்கள் காருக்கு ஒதுக்கித் தரும்.
இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், உங்களுக்குப் பிடித்த வி.ஐ.பி. எண்ணை சட்டப்படி பெற்று விடலாம்!


Click it and Unblock the Notifications