டெல்லி: இந்தியாவில் மேற்படிப்பு முடித்தவர்களை விட எழுத படிக்கத் தெரியாதவர்களுக்கான வேலை வாய்ப்பு என்பது அதிகமாக இருக்கிறது என ஒரு ஆய்வு அறிக்கை வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இன்டர்நேஷனல் லேபர் ஆர்கனைசேஷன் எனப்படும் சர்வதேச பணியாளர் அமைப்பு இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை நிலைமை குறித்து ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பின்மை விகிதம் 29.1% ஆக உள்ளது, அதே வேளையில் எழுதப் படிக்க தெரியாத நபர்களுக்கான வேலை வாய்ப்பின்மை விகிதம் என்பது வெறும் 3.4% ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது எழுதப்படிக்கத் தெரியாதவர்களின் வேலை வாய்ப்பின்மை விகிதத்தை விட பட்டதாரிகளின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 9 மடங்கு அதிகமாக இருப்பது இந்த ஆய்வறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் இடைநிலை கல்வி மற்றும் உயர்நிலை கல்வி முடித்தவர்களின் வேலை வாய்ப்பின்மை விகிதம் 18.4% ஆகும்.
இந்தியாவில் தற்போது வேலைவாய்ப்பின்மை பிரச்சனை தான் பெருமளவில் உள்ளது என இந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பணியாளர்களுக்கு அந்த வேலைக்கான திறமைகள் குறைவாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவை விட இந்தியாவில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பள்ளி கல்வி முறை வேலைவாய்ப்புக்கான திறன்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் இல்லை என்கிறது இந்த ஆய்வு. கல்வி பயின்று முடித்து வேலை தேடி வரும் இளைஞர்களுக்கு விவசாயம் அல்லாத துறைகளில் வேலை வாய்ப்பை உருவாக்கி தர இந்தியா தவறிவிட்டது என்றும் இதுவே வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கிறது என்றும் இந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில் 15 முதல் 29 வயது உட்பட்ட வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கை 2000 ஆம் ஆண்டு 88.6% ஆக இருந்து 2022 ஆம் ஆண்டு 82.9% ஆக உயர்வு கண்டுள்ளது. அதேவேளையில் கல்வி பயின்ற இளைஞர்களின் எண்ணிக்கை 2000 ஆம் ஆண்டு 54.2% ஆக இருந்து 2022 ஆம் ஆண்டு 65.7 % என உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கல்வி பயின்று வேலை வாய்ப்பு பெறாத ஆண்களின் எண்ணிக்கை 62.2% ஆகவும், கல்வி பயின்று வேலை வாய்ப்பு இல்லாத பெண்களின் எண்ணிக்கை 76.7% ஆகவும் உள்ளது. இந்தியாவில் கிராமப்புறங்களை ஒப்பிடும்போது நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை என்பது அதிகமாக உள்ளது.
மேலும் தற்காலிக மற்றும் குறைந்த ஊதியம் கொண்ட வேலையை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் இதன் காரணமாக பணியாளர்களின் நலனை கண்காணிப்பது மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது என்றும் இந்த ஆய்வு அறிக்கை கூறியுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications