பீகார் தேர்தல் முடிந்த நிலையில், மத்தியில் ஆளும் அரசான பாஜக-விற்கு புதிய சவால் உருவாகியுள்ளது. ஆம் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அளவை கட்டுப்படுத்த வேண்டிய நெருக்கடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒருப்பக்கம் ஏஐ மூலம் மக்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வரும் வேளையில் மறுப்புறம் புதிய முதலீடுகள் வருவது வாயிலாகவும், தொழிற்சாலை துவங்குவது வாயிலாகவும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டாலும், வேலைவாய்ப்பின்மை அளவு என்னவோ குறையவே இல்லை.
அமெரிக்க பொருளாதாரத்தை ஆட்டிவைக்கும் வேலைவாய்ப்பின்மை அளவு, இந்திய பொருளாதாரத்தில் இதேபோன்ற தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், மத்திய மாநில அரசுகளுக்கு இது பெரும் நெருக்கடியாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு அக்டோபர் மாதத்திற்காக வேலைவாய்ப்பின்மை தரவுகளை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் வேலையின்மை விகிதம் செப்டம்பர் மாதத்தைப் போலவே அக்டோபர் மாதத்திலும் 5.2 சதவீதமாகவே இருப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளில் அறிவித்துள்ளது. இதேவேளையில் அக்டோபர் மாதம் கிராமப்புற வேலையின்மை சற்று குறைந்து செப்டம்பரில் இருந்த 4.6 சதவீத அளவீடு அக்டோபரில் 4.4 சதவீதமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் நகர்ப்புற வேலையின்மை 6.8 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நகர்ப்புற வேலையின்மை அதிகரித்துள்ளது பெரும் கார்ப்ரேட் நிறுவனத்தில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மையை காட்டுகிறது. கிராமபுற வேலைவாய்ப்பின்மை குறைவாக இருப்பது பொருளாதாரத்திற்கு வலிமை என்றாலும் நகரப்புற வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது நுகர்வோர் சந்தைக்கு பெரும் ஆபத்து. இது செயின் ரியாக்ஷனாக பல துறைகளை பாதிக்கும் என்பது தான் அடுத்த முக்கியமான விஷயம்.
இதை தொடர்ந்து பெண்களின் வேலையின்மை விகிதம் செப்டம்பரில் 5.5 சதவீதமாக இருந்த நிலையில் அக்டோபரில் 5.4 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த சரிவுக்கு முக்கிய காரணம் கிராமப்புற பெண்களின் வேலையின்மை விகிதம் 4.3 சதவீதத்திலிருந்து 4.0 சதவீதமாக குறைந்ததுதான். குறிப்பாக விவசாயம் சார்ந்த பருவகால வேலைகள் மற்றும் அரசு திட்டங்களால் ஏற்பட்ட முன்னேற்றம் மூலம் பெண்களின் லேலைவாய்ப்பின்மை குறைந்துள்ளது. ஆனாலும் வேலைவாய்ப்பு சந்தையில் பெண்களின் பங்கீடு என்பது குறைவு, இதை மேம்படுத்த பல முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆண்களின் வேலையின்மை விகிதம் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 5.1 சதவீதமாகவே நிலையாக உள்ளது. கிராமப்புறத்தில் ஆண்களின் வேலையின்மை 4.7 சதவீதத்திலிருந்து 4.6 சதவீதம் என்ற சிறிய அளவிலான சரிவை மட்டுமே பதிவு செய்துள்ளது. இதேபோல் நகர்ப்புறத்தில் 6.0 சதவீதத்திலிருந்து 6.1 சதவீதமாக உயர்ந்ததுள்ளது.
கிராமப்புற வேலையின்மை குறைந்தாலும் நகர்ப்புறத்தில் உயர்ந்திருப்பது, இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. கிராமங்களில் அரசின் ஊரக வேலை உறுதித் திட்டங்கள், விவசாய பருவ வேலைகள் ஆகியவை சற்று நிவாரணம் அளித்தாலும், நகரங்களில் இளைஞர்கள் பெருமளவில் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கின்றனர்.
இதேபோல் இனி வரும் காலக்கட்டத்தில் ஏஐ தொடர்பான பணிநீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் என்ற அச்சமும் அதிகமாக உள்ளது. இதை மத்திய மாநில அரசுகள் எப்படி கையாளப்போகிறது, என்பது தான் தற்போதைய முக்கிய கேள்வியாக உள்ளது.


Click it and Unblock the Notifications