இந்திய சீன எல்லை பிரச்சனைக்குப் பின்பு இந்தியாவில் இருக்கும் பல சீன நிறுவனங்கள் பல்வேறு நெருக்கடி காரணமாக வெளியேறிய நிலையில், பல்வேறு அச்சுறுத்தல் மற்றும் மக்களின் தனிநபர் தரவுகள் பாதுகாப்புக் காரணமாக மத்திய அரசு ஒவ்வொரு சீன முதலீடுகளையும் ஆய்வு செய்வதாக அறிவித்து முதலீடுகளையும் தடுத்து நிறுத்தியது.
இதன் மூலம் சீன ஆட்டோமொபைல் மொபைல் நிறுவனங்கள் துவங்கிப் பல சீன நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்ய முடியாமலும், முதலீடு செய்ய முடியாமலும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது சீன நிறுவனங்களுக்கு மத்திய அரசு கதவைத் திறக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சீனா
அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தகப் போர், கொரோனா, ஜீரோ கோவிட் பாலிசி, சீனா +1 கொள்கை எனப் பல காரணங்களுக்காகச் சர்வதேச நிறுவனங்கள் சீனாவில் இருந்து உற்பத்தி தளத்தை மொத்தமாக இந்தியா மற்றும் பிற தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மாற்றி வருகிறது.
சீனா +1 கொள்கை
இது இந்தியாவுக்குப் பெரிய அளவில் பலன் அளித்துள்ளது, குறிப்பாகச் சீனா +1 கொள்கை ஏற்றுள்ள பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் இந்தியாவைப் புதிய உற்பத்தி தளமாக மாற்றி வருகிறது. இந்த நிலையில் இந்தியா சீன நிறுவனங்கள் மீதும், சீன முதலீடுகள் மீதும் வைத்துள்ள கட்டுப்பாடுகள் முக்கியமான துறையில் உற்பத்தி தளத்தை அமைக்கத் தடையாக உள்ளது எனக் கருத்து நிலவியது.
ஹைடெக் எலக்ட்ரானிக்ஸ்
இந்த நிலையில் மத்திய அரசு, ஹைடெக் எலக்ட்ரானிக்ஸ் துறையில் மட்டும் சீன நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது, ஆனால் இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைக்க வரும் சீன நிறுவனங்கள் அனைத்தும், இந்திய நிறுவனங்களின் கூட்டணியில் தான் அமைக்க வேண்டும் எனக் கட்டுப்பாட்டை வைக்கப்பட்டு உள்ளதாக அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கூட்டணி நிறுவனங்கள்
இந்திய கூட்டணி நிறுவனங்களைத் தேர்வு செய்யும் பணியில் மத்திய அரசும் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது, இந்தக் கட்டுப்பாடு சீனாவில் இருந்து இந்தியா வரும் நிறுவனங்களுக்கும் மட்டுமானது இல்லை தென் கொரியா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் ஹைடெக் எலக்ட்ரானிக்ஸ் துறை சார்ந்த அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். சீன முதலீட்டு ஆதிக்கம் கொண்ட நிறுவனங்கள் உலக நாடுகளில் ஏறலாம்.
இந்திய நிறுவனங்கள் ஆதிக்கம்
ஹைடெக் எலக்ட்ரானிக்ஸ் துறையைச் சார்ந்து இந்தியா வரும் சீனா நிறுவனங்கள் உள்நாட்டு நிறுவன கூட்டணி உடன், நிர்வாகக் குழுவில் இந்திய நிறுவனங்களுக்கு அதிகப்படியான ஆதிக்கம் கொண்டு அமைக்கப்பட்டால் உடனடியாக ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் உள்நாட்டு நிறுவன கூட்டணியில் மட்டுமே சீன நிறுவனங்களின் வருகையை ஏற்றுக்கொள்ள முடியும்.
மத்திய அரசு
ஹைடெக் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறையில் இந்தியாவில் அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் மத்திய அரசு சுமார் 50 -60 உள்நாட்டு நிறுவனங்களை இப்பரிவில் தேடி தயாராக வைக்கும் பணிகளைத் துவங்கியுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவிக்கும் சீன நிறுவனங்களை ஈர்க்க தயாராக உள்ளது மத்திய அரசு.
LAVA நிறுவனம்
சமீபத்தில் இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான LAVA, ஷாங்காய்த் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் Huaqin Technology உடன் கூட்டணி முறையில் மொபைல், டாப்லெட் ODM தயாரிக்கத் தொழிற்சாலை அமைப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏப்ரல் 2020 சீன முதலீட்டு கட்டுபாட்டுக்கு பின்பு சீன நிறுவனத்துடன் கூட்டணி பேசும் முதல் நிறுவனம் LAVA.


Click it and Unblock the Notifications