அட எதுக்கு வரிய அதிகரிச்சாலும் அது சீனாவுக்குத் தான் பதிலடியாக இருக்குமா? என்ன என கேட்பது புரிகிறது.
பொதுவாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சோலார் மற்றும் சோலார் உபகரணங்களில் 80 - 90 சதவீதம் சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றது.
இந்திய சீனா எல்லை பதற்றங்களுக்கு மத்தியில், சீன பொருட்கள் வேண்டாம் என்ற கோசம் பலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் வரி அதிகரிப்பு என்றாலே அப்படித் தானே யோசிக்க தோன்றுகிறது.
இந்திய தயாரிப்புகளுக்கு ஊக்குவிப்பு
ஆனால் விஷயம் அதுவல்ல, ஏனெனில் கடந்த சில வாரங்களுக்கு முன்பே பிரதமர் மோடி, இந்திய சீனா பிரச்சனைகளுக்கு முன்பே, கொரோனாவினால் சரிந்து வரும் பொருளாதாரத்தினை மேம்படுத்த, இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த வேண்டும். உலகத்திற்காக இந்தியா பொருட்களை தயாரிக்க வேண்டும் என்றும் கூறினார்.
சுங்க வரியை அதிகரிக்க திட்டம்
ஆக கொரோனாவினால் நலிவடைந்து போயுள்ள பொருளாதாரத்தினை ஊக்கப்படுத்தும் விதமாகவும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாகவும் சோலார் மற்றும் சோலார் உபகரணங்கள் இறக்குமதிக்கு ஆகஸ்ட் முதல் 20 சதவீத வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. அதோடு தற்போது சோலார் உபகரணங்களுக்கு 15 சதவீத SGD வரி விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஜூலை 29ம் தேதியன்று காலாவதியாக உள்ளது.
சீன இறக்குமதி முக்கிய பங்கு
தற்போது சோலார் உபகரணங்களுக்காக இந்தியா சீனாவினையே 80 - 90% நம்பியுள்ளது. இந்த நிலையில் 2022ம் ஆண்டுக்குள் சோலார் பவரை 100 GW அடையும் இலக்கில் சீனாவின் பங்கு மிக முக்கியமானது. 2020ம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான சோலார் உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில் 1.2 பில்லியன் டாலர் சீனாவில் இருந்து மட்டும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
Basic Custom Duty அமல் எப்போது?
முன்னதாக சீனா மற்றும் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறக்குமதிக்கு SGD 25 சதவீதமாக விதிக்கப்பட்டிருந்தது. இது ஜூலை 2019 முதல், ஜனவரி 2020 வரையில் 20 சதவீதமாகவும், இது பின்னர் 15 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி விகிதமானது இந்தியாவில் சோலார் மின் உற்பத்தியினை ஊக்குவிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர கடந்த மத்திய பட்ஜெட்டில் Basic Custom Duty அறிவிக்கப்பட்டது. தற்போது இருக்கும் நிலையில் இது எப்போது அமல்படுத்தப்படுமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
யார் யார் இறக்குமதி?
இந்தியாவின் சோலார் உற்பத்தியாளர்கள் அதானி சோலார், விக்ரம் சோலார், வேர் எனர்ஜி மற்றும் டாடா பவர் சோலார் போன்ற நிறுவனங்கள் தலைமையிலான இந்தியா நிறுவனங்கள், அதன் புராஜக்ட் திட்டங்களை பெரும்பாலும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் செலவினை பொறுத்தே எடுத்திருப்பார்கள். ஆக இவர்கள் பொருளாதார ரீதியாக மாறவும் வாய்ப்பில்லை.
எவ்வளவு செலவு?
சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் சோலார் உபகரணங்களுக்கு, ஒரு வாட்டுக்கு 0.16 - 0.20 டாலர் தான் செலவு. இதே உள்நாட்டு உற்பத்தியில் ஒரு வாட்டுக்கு 0.25 - 0.28 டாலர் செலவாகும். இது கொரியாவில் இருந்து இறக்குமதி செய்தால், 0.22 - 0.24 டாலரும், இதே மலேசியா, வியட்னாம், தாய்வான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் செலவு அதிகம் தான் என்றும் கூறப்படுகிறது.
ஆக சீனா தான் செலவினம் குறைவு என்பதால், இதுவே அதிகம் இறக்குமதி செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications