இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் (IPPB) தங்கள் நிறுவனத்தின் 9-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் இன்சூரன்ஸ் சேவைகளை அறிமுகம் செய்திருக்கிறது. இனி முதலீடு செய்ய விரும்புபவர்கள் எளிய முறையில் முதலீடு செய்யலாம். பாலிசி சேவைகளையும் டிஜிட்டல் வழியில் பெறலாம்.
IPPB தரப்பில் செப்டம்பர் 1-ஆம் தேதி அன்று இந்த அறிவிப்புகள் வெளியானது. இதை அரசு செய்தி நிறுவனமான பிரஸ் இன்பர்மேஷன் பியூரியோ (PIB) உறுதி செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் இனி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கும், இன்சூரன்ஸ் பாலிசி பெறுவதற்கும் வீட்டிலிருந்தே டிஜிட்டல் வழியைப் பயன்படுத்த முடியும்.

ஆயுள் காப்பீடு, சுகாதார காப்பீடு, பொது காப்பீடு என பல ஆப்ஷன்கள் இருப்பதால் இந்த 2 சேவைகளில் எதை பெறுவதற்கும் அலைந்து திரிய வேண்டிய அவசியம் இருக்காது. பணப்பரிவர்த்தனையும் தாண்டி முதலீடு மற்றும் பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் தங்களுடைய சேவைகளை விரிவுபடுத்தி வருவதாக வங்கியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி IPPB வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் எந்தெந்த டிஜிட்டல் சேவைகளை பெறுகின்றனரோ அந்தப் பட்டியலில் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் காப்பீடு சேவைகள் சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால் எந்தெந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இருக்கும்? எந்தெந்த காப்பீட்டு நிறுவனங்களின் பாலிசி இந்தத் தளத்தில் கிடைக்கும்? என்பது குறித்த விவரங்களை PIB குறிப்பிடவில்லை. அதேபோல வாடிக்கையாளர்களிடம் விதிக்கப்படும் கட்டணங்கள், கமிஷன்கள் குறித்தும் எந்தத் தகவலும் இல்லை. இவை இனிவரும் நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளது.
சாமானியர்களும் நல்ல முதலீடு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.. பாலிசி பெற வேண்டும், என்பதற்காகவே வங்கி தனது டிஜிட்டல் சேவையை விரிவுபடுத்தி வருவதாக IPPB-யின் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆர்.விஸ்வேஸ்வரன் கூறியுள்ளார்.
2026-ஆம் ஆண்டின் மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி IPPB வங்கியில் மொத்தம் 13.25 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில் 77 சதவீதத்தினர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்காகவே தற்போது இந்த புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவரையில் வாடிக்கையாளர்கள் மொத்தமாக ரூ.29,104 கோடியை வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர். 1.65 லட்சம் போஸ்ட் ஆபீஸ்கள் மற்றும் 3 லட்சம் போஸ்ட் ஆபீஸ் ஊழியர்களைக் கொண்டு 5.57 லட்சம் கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு IPPB வங்கியின் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இது மட்டுமின்றி சுய உதவி குழுக்கள், கிராமப்புற குரு தொழில் முனைவோருக்காக SHG சேமிப்பு கணக்கு போன்றவற்றையும் அறிமுகம் செய்துள்ளது. சுரக்ஷித் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மோசடிகள் நடந்தால் அதற்கு ரூ.25,000 வரை காப்பீடும் வழங்கப்படுகிறது.
முதலீடு செய்வதற்கு முன்பு வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்: எந்த ஒரு தளம் புதிதாக தொடங்கப்பட்டிருந்தாலும் சரி, முதலீடு செய்வதற்கு முன்பு அல்லது காப்பீடு வாங்குவதற்கு முன்பு வாடிக்கையாளர்கள் ஒரு சில விஷயங்களை கட்டாயம் பார்க்க வேண்டும்.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களாக இருந்தால் அந்தத் திட்டத்தின் முதலீட்டு காலம் என்ன? ரிஸ்க் எவ்வளவு? செலவுகள் எப்படி இருக்கும்? அது உங்களுடைய நிதி இலக்குடன் பொருந்துகிறதா? என்பதை எல்லாம் ஆராய வேண்டும். அதேபோல கடந்த கால வருமானத்தின் அடிப்படையில் எந்த திட்டத்தையும் தேர்ந்தெடுக்கக் கூடாது. காப்பீடு பெறுபவர்கள் எவ்வளவு கவரேஜ் கிடைக்கும்? வெயிட்டிங் பீரியட் எவ்வளவு? பிரீமியம், பாலிசி காலம் மற்றும் நிபந்தனைகள் போன்றவற்றையும் கவனிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
