டெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில், இந்தியாவில் 21 நாள் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது.
இதனால் அத்தியாவசியம் தவிர பலவும் முடங்கியுள்ளன. இதற்கிடையில் மக்கள் பலரும் தங்களது வேலையினை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை கூட இழக்கும் நிலை கூட நிலவி வருகிறது.

இப்படி ஒரு நிலையில் தான் இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் 2021ம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் வெறும் 3.3% ஆகத்தான் இருக்கும் என்று கணித்துள்ளது. இது முன்பு 5.5% ஆக கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சரி இவ்வளவு குறைப்பதற்கு காரணம், தற்போது நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் ,தற்போது அமலில் உள்ள ஊரடங்கு ஏப்ரல் இறுதிவரை அமலுக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளது.
இது ஏற்கனவே மந்த நிலையில் இருக்கும் பொருளாதாரத்தினை மேலும் பிரச்சனைக்கு கொண்டு செல்லலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் இதன் தாக்கம் 2021ம் நிதியாண்டின் வளர்ச்சியிலும் எதிரொலிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இது மட்டும் அல்ல, இந்த மதிப்பீடு நிறுவனம் 2020ம் ஆண்டிற்கான வளர்ச்சியினையும் குறைத்துள்ளது. இது முன்பு 5% ஆக கணித்திருந்த நிலையில் தற்போது அதனை 4.7% ஆக குறைத்துள்ளது. மேலும் நடப்பு நிதியாண்டின் நான்காம் காலாண்டில் வளர்ச்சி விகிதம் 3.6% ஆகவும், இதே அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 2.3% ஆகவும் கணித்துள்ளது.
இதே 2021ம் நிதியாண்டில் முதல்பாதி வளர்ச்சியின் சராசரி விகிதம் 2.8% ஆகவும், இரண்டாம் பாதியின் சராசரி விகிதம் 4.3% ஆகவும் கணித்துள்ளது.
சரி இதற்கு என்ன காரணம் ஏன் இந்த அளவுக்கு வீழ்ச்சி காணும் வாருங்கள் பார்க்கலாம். நாட்டில் நிலவி வரும் அசாதாரண நிலைக்கு மத்தியில் அதிகளவிலான அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகின்றன. மேலும் தற்போது புதிய முதலீடுகளும் வருவதும் கஷ்டம். இதனால் உற்பத்தி துறை பெரிதும் பாதிக்கப்படலாம்.
இது தவிர மக்களின் கையில் பணப்புழக்கம் குறைந்து வருவதால், நுகர்வும் குறைந்து வருகிறது. இதனால் தேவையும் குறைந்து வருகிறது. இது வினியோக சங்கிலியிலும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
இது தவிர சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பாதிப்பு, ஹாஸ்பிட்டாலிட்டி செக்டார், சுற்றுலா துறை, விமானத் துறை என பல துறைகள் பலமான பெருத்த அடியினை வாங்கி வருகின்றன. இதனால் இந்த துறைகளில் வளர்ச்சி குறையலாம்.
ஆக இதன் மூலம் நிறுவனங்களின் வருவாயும் குறையும். அரசுக்கு வரவேண்டிய வருவாயும் குறையும். மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலையில் விவசாயத்துறையிலும் சற்று பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளது. இப்படியாக சங்கிலித் தொடராக ஒவ்வொரு துறையும் பிரச்சனையை சந்தித்து வரும் நிலையில் வளர்ச்சி விகிதம் குறையலாம் என்பதற்கு சாட்சி சொல்லும் விதமாகத் தான் உள்ளன.


Click it and Unblock the Notifications