ஈரானில் நடைபெற்று வரக்கூடிய போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கிறது. வளைகுடா நாடுகளில் இருந்து சரக்குகளை கப்பல் வழியாக கொண்டு வருவதற்கு இருக்கக்கூடிய ஒரே வழி ஹார்முஸ் ஜலசந்தி தான். ஈரானுக்கு அருகில் இருக்கக்கூடிய இந்த குறுகிய பாதை வழியாக தான் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், எல்பிஜி, உரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் கப்பல் வழியாக கொண்டுவரப்பட வேண்டும்.
போர் காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. தங்களை மீறி இந்த பகுதியை கடக்க முயன்றால் அந்த கப்பல்களை சுட்டு வீழ்த்துவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அடுத்து பாதுகாப்பு கருதி பல்வேறு நாட்டு சரக்கு கப்பல்களும், எண்ணெய் கப்பல்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. மூன்று வார காலமாக இந்த ஜலசந்தி வழியாக எந்த ஒரு கப்பலும் கடந்து வெளியே வரவில்லை.

இந்தியாவிற்கு தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி ஆகியவை இந்த வழியாக தான் வரவேண்டும். மூன்று வார காலமாக இவை வராததன் காரணமாக இங்கே கடுமையான எல்பிஜி தட்டுப்பாடு என்பது ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஈரான் நாட்டு அரசோடு தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கான இரண்டு கப்பல்கள் lpg ஏற்றி கொண்டு ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க ஈரான் அரசு அனுமதி தந்தது.
அதன்படி இரண்டு எல்பிஜி கப்பல்கள் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா வந்தடைந்து விட்டன. இதன் மூலம் தற்போதைக்கு எல்பிஜி தட்டுப்பாடு தீர்வு கிடைத்திருக்கிறது. இந்த சூழலில் தான் இந்திய கப்பல்களை அனுமதிக்க இரண்டு நிபந்தனைகளை ஈரான் விதித்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்து வெளியிட்டது. கடந்த மாதம் இந்திய எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதியில் முறைகேடான செயல்களின் ஈடுபட்டதாக கூறி ஈரானுக்கு சொந்தமான மூன்று கப்பல்களை இந்தியா சிறை பிடித்து வைத்திருக்கிறது. அந்த மூன்று கப்பல்களையும் விடுவிக்க வேண்டும் என ஈரான் தரப்பில் நிபந்தனை விதித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி குறிப்பிட்டது.

அதே போல சிலவகையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஈரானுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என ஈரான் அரசு நிபந்தனை விதித்ததாம். இது தொடர்பாக இந்தியாவுக்கான ஈரான் தூதர் கூட வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே மத்திய அரசு வட்டாரங்கள் ஈரான் இப்படி ஒரு நிபந்தனை விதித்ததாக வெளியான தகவலை மறுத்து இருக்கின்றன. இது ஒரு அடிப்படை ஆதாரமற்ற செய்தி என கூறியிருக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு பேச்சு வார்த்தையும் ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடைபெறவில்லை என கூறி இருக்கின்றன.
முன்னதாக வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இந்த விவகாரத்தில் ஈரானுக்கு பதிலுக்கு எதுவுமே கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். ராஜாங்க ரீதியிலான பேச்சு வார்த்தைகள் மூலம் எதையும் வெல்ல முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என அவர் தெரிவித்தார். மேலும் 20 சரக்கு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து பாதுகாப்பாக இந்தியா வந்து சேர்வதற்கு உதவி செய்யும்படி மத்திய அரசு தொடர்ந்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications