அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாறு காணாத விதமாக பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்தியா இன்னும் ஏற்றுமதி மிகை நாடாக இல்லாத நிலையில், உற்பத்தி துறை முதல் மக்களின் அத்தியாவசிய தேவை வரையில் இறக்குமதி பொருட்களை மட்டுமே நம்பியிருக்கும் வேளையில் வெளிநாட்டு நாணயத்தை நம்பி வர்த்தகம் செய்யும் நாடாக இந்தியா உள்ளது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்படும் சிறிய அளவிலான சரிவும் சாமானிய மக்களின் பட்ஜெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்காகவே ஆர்பிஐ, மத்திய அரசு ஆகியவை ரூபாய் மதிப்பைக் கட்டுப்படுத்த அவ்வப்போது டாலர் இருப்பை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கையில் இறங்கி வருகிறது.

ஆயினும் இந்த நடவடிக்கை பலன் அளிக்காமல் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாறு காணாத விதமாக 85.06 என்ற அளவை தொட்டது. இந்த மோசமான வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது 2 நாள் நாணய கொள்கை முடிவில் அந்நாட்டின் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் வரையில் குறைத்தது தான்.
அமெரிக்க ரிசர்வ் வங்கி, 2024 ஆம் ஆண்டின் இறுதி கூட்டத்தில் தனது வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. இந்த வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாத இருந்தாலும், அடுத்த வருடத்தில் வட்டி விகிதக் குறைப்புகளின் எண்ணிக்கை 2 முறை மட்டுமே செய்யப்படும் என்ற பெடரல் ரிசர்வ் கணிப்பு முதலீட்டுச் சந்தையைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதன் வாயிலாகப் பங்குச்சந்தை, தங்கம், பிட்காயின் என அனைத்தும் பெரும் சரிவைச் சந்தித்து அரசு பத்திரங்களில் முதலீட்டைக் குவித்துள்ளது. மேலும் பெடரல் ரிசர்வ் அந்நாட்டின் பணவீக்கத்தை 2% இலக்குக்குக் கொண்டுவருவதற்குக் குறித்த கால அவகாசம் கூடுதலாகத் தேவைப்படும் என தெரிவித்துள்ளது.
பெடரல் ரிசர்வ்-ன் இந்த கடுமையான நிலைப்பாடு அமெரிக்க டாலர் மதிப்பை உயர்த்த வழிவகுத்தாலும் முதலீட்டு சந்தையை பந்தாடியுள்ளது. இதனால் இந்திய ரூபாய் உள்ளிட்ட பல நாணயங்களின் மதிப்பு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
டாலர் மதிப்பு வலுவடைந்தால் வெளிநாட்டில் இருந்து அதிகளவில் பொருட்கள் மற்றும் சேவைகளை இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு செலவுகளை அதிகரிக்க வழிவகுக்கும். இதனால் பணவீக்கமும் அதிகரிக்கும், பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கும்.
கூடுதலாக, வெளிநாட்டு கடன்களுக்கு வட்டி செலுத்துவதற்கான செலவை அதிகரிக்கும், இதன் வாயிலாக அன்னிய செலாவணி கையிருப்பிலும் பாதிப்பு ஏற்படும்.


Click it and Unblock the Notifications