ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 23ஆவது இந்தியா-ரஷ்யா இருதரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு வரவுள்ளார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு புதின் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். டிசம்பர் 4ஆம் தேதி வருகை தரும் அவர் இரண்டு நாட்கள் இந்தியாவில் தங்க உள்ளார். புதினின் இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையே புதிய உறவை தொடங்கி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணேய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு டிரம்ப் அரசு 50% இறக்குமதி வரி விதித்துள்ளது. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் வர்த்தக மோதல் நீடிக்கும், நிலையில் ரஷ்யா உடனான உறவை வலுப்படுத்தும் வகையில் புதினின் பயணம் அமைந்துள்ளது. மேலும், 2022 இல் உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை தொடங்கிய பிறகு புதின் இந்தியாவுக்கு வரும் முதல் பயணம் இது என்பதும் சிறப்பு அம்சமாகும்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல்படி, டிசம்பர் 4 ஆம் தேதி மாலை புதுடெல்லி வந்தடையும் புதினுக்கு, 7, லோக் கல்யாண் மார்க்கில் பிரதமர் மோடி இரவு விருந்து அளிப்பார். டிசம்பர் 5 ஆம் தேதி முக்கிய நிகழ்வுகள் நடைபெறும். அன்று காலை, ராஷ்டிரபதி பவனில் முப்படை மரியாதைக் காவல் அணிவகுப்புடன் புதின் வரவேற்கப்படுவார். அதைத் தொடர்ந்து, மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராஜ்காட் செல்வார்.
டிசம்பர் 5 ஆம் தேதி காலை சுமார் 11 மணியளவில் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் 23வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டை நடத்துவார்கள். இந்தச் சந்திப்பில், பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் வியூக ஒத்துழைப்பு போன்ற துறைகளில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு தலைவர்களும் தங்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒரு கூட்டு அறிக்கையையும் வெளியிடுவார்கள்.
டிசம்பர் 5 ஆம் தேதி பிற்பகல் சுமார் 4 மணியளவில், இரு தலைவர்களும் இந்தியா-ரஷ்யா வர்த்தக மன்றத்தில் உரையாற்றுவார்கள். பாரத் மண்டபத்தில் வணிகத் தலைவர்களுடன் நடைபெறும் இந்தச் சந்திப்பில், இருதரப்பு வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும்.
வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூற்றுப்படி, ரஷ்யாவின் கட்டுமானம், சுகாதாரம் மற்றும் ஹாஸ்பிடாலிட்டி துறைகளில் திறமையான இந்தியத் தொழிலாளர்களைப் பணியாற்ற அனுமதிக்கும் தொழிலாளர் இடம்பெயர்வு ஒப்பந்தத்தையும் இரு நாடுகளும் இறுதி செய்து வருகின்றன. யூரேசிய பொருளாதார ஒன்றியத்துடன் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு, ரஷ்ய இராணுவத்தில் உள்ள இந்தியப் பிரஜைகளின் பாதுகாப்பான திரும்புதல் மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துதல் குறித்தும் விவாதங்கள் நடைபெறும்.
வெள்ளி அன்று மாலை சுமார் 7 மணியளவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, புதினுக்கு அரசு விருந்து அளிப்பார். இந்தியாவில் சுமார் 30 மணி நேரம் செலவிட்ட பிறகு, டிசம்பர் 5 ஆம் தேதி பிற்பகுதியில் புதின் ரஷ்யாவுக்கு புறப்படுவார்.
இதற்கு முன்னர் புதினின் டிசம்பர் 2021 இல் உக்ரைன் மோதலுக்கு முன்பு இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். இந்த பயணத்தில் அவர் இந்தியாவில் சுமார் 30 மணி நேரம் இருப்பார். தனிப்பட்ட இரவு உணவு, இருதரப்பு பேச்சுவார்த்தைகள், வர்த்தக மன்றம், ரஷ்யா டுடே தொடக்கம் மற்றும் அரசு விருந்து ஆகியவை முக்கிய நிகழ்வுகளில் அடங்கும்.


Click it and Unblock the Notifications