2020-21ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்த நிதி பற்றாக்குறை அளவு இந்தியாவின் ஜிடிபி-யில் 9.3 சதவீதமாக உள்ளது. மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 2020ல் அறிவிக்கப்பட்ட பட்ஜெட் அறிவிப்பில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 3.5 சதவீதமாக இருக்கும் என அறிவித்திருந்தார்.
ஆனால் கொரோனா தொற்றும், லாக்டவுன் அறிவிப்புகளும் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு என அனைத்தையும் சூறையாடிய காரணத்தால் மத்திய அரசின் வருவாய் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டது.
கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன்
2020-21ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டில் கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் -24.37 சதவீதம் வரையில் சரிந்தது. இதன் பின்பு மத்திய நிதியமைச்சகம் தனது நிதிப் பற்றாக்குறை அளவை மறு ஆய்வு செய்து 9.5 சதவீதமாக அறிவித்தது.
நிதிப் பற்றாக்குறை அளவு
இந்நிலையில் 2020-21ஆம் நிதியாண்டின் முடிவில் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டின் மொத்த நிதிப் பற்றாக்குறையின் அளவு நிதியமைச்சகம் கணித்ததை விடவும் சற்று குறைவான அளவீடான 9.3 சதவீதம் பதிவு செய்துள்ளது.
இது பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 3.5 சதவீதத்தை விடவும் 2.6 மடங்கு அதிகம்.
18,21,461 கோடி ரூபாய்
இதன் மூலம் நாட்டின் மொத்த நிதிப் பற்றாக்குறையின் அளவீடு 18,21,461 கோடி ரூபாயாக உள்ளது. இந்தப் பற்றாக்குறையைச் சமாளிக்க மத்திய நிதியமைச்சகம் கடன் பெறவும், அரசு கையிருப்பில் இருக்கும் சொத்துக்கள் மற்றும் பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்ய உள்ளது.
2019-20ஆம் நிதியாண்டிலேயே நாட்டின் மொத்த நிதிப்பற்றாக்குறையின் அளவு 4.6 சதவீதமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா Vs இந்தியா
அமெரிக்காவின் ஜிடிபி மார்ச் காலாண்டில் 6.4% உயர்வடைந்த நிலையில் இந்தியா வெறும் 1.6% மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. 2021ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.3 சதவீதம் சரிவு. இது 4 வருடத்தின் மோசமான நிலை.


Click it and Unblock the Notifications