உணவுப் பொருட்களின் விலை உயர்வால், இந்தியாவின் சில்லறை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக திங்கள்கிழமை வெளியான அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம், செப்டம்பரில் 5.49 சதவீதமாக உயர்ந்துள்ளது. சில்லறை பணவீக்கம் ஆகஸ்டில் 3.65 சதவீதமாக இருந்தது. கடந்த டிசம்பர் 2023-ஆம் ஆண்டில் இருந்த 5.69 சதவீதத்திற்குப் பிறகு இந்த ஆண்டு இரண்டாவது முறையாக சில்லறை பணவீக்கம் 5.49 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இருப்பினும், இந்த விலைவாசி இந்திய ரிசர்வ் வங்கியின் இலக்கு வரம்பான 2 சதவீதம் முதல் 6 சதவீதத்திற்குள் உள்ளது. உணவுப் பணவீக்கம், ஆகஸ்ட் மாதத்தில் 5.66% உயர்வுடன் அதிகரித்துள்ளது. இது ஜூலையில் 5.42% ஆகவும், ஜூன் மாதத்தில் 9.36% ஆகவும், மே மாதத்தில் 8.69% ஆகவும், ஏப்ரலில் 8.70% ஆகவும் இருந்தது என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) தெரிவித்துள்ளது.

உணவு பணவீக்கம் கடந்த ஆண்டில் இருந்த 6.6 சதவீதத்திலிருந்து 9.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதில் முக்கியமாக தானியங்கள் 6.8 சதவீதமாகவும் காய்கறிகள் 36 சதவீதமாகவும், முட்டை 6.3 சதவீதமாகவும், பருப்பு வகைகள் 9.8 சதவீதமாகவும் மற்றும் பழங்கள் 7.7 சதவீதமாகவும் உள்ளன.
கடந்த ஆண்டு சீரற்ற மற்றும் இயல்பை விட குறைவான பருவமழை காரணமாக, உணவுப் பொருட்களின் விலைகள் ஓராண்டுக்கு மேலாக உயர்ந்து, நவம்பர் 2023 முதல் ஜூன் 2024 வரை 7 சதவீதத்திற்கு மேல் அதிகரித்தது.
ஜூலை மாதத்தில் உணவுப் பணவீக்கம் குறைந்தாலும், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் உயர்ந்துள்ளது. தானியங்கள், இறைச்சி, மீன், முட்டை மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றின் விலைகள் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் செப்டம்பர் மாதத்தில் குறைந்திருந்தாலும், பால் மற்றும் பால் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் செப்டம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளன.
செப்டம்பரில் ஆடைகளின் விலை தொடர்ச்சியாக உயர்ந்தது, மேலும் அந்த மாதத்தில் காலணிகளின் விலைகள் சரிந்தன. காய்கறிகளின் விலை செப்டம்பர் மாதத்தில் 3.49 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம் சமையல் எண்ணெயின் விலை ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடுகையில் செப்டம்பர் மாதம் 2.91% அதிகரித்துள்ளது. நாட்டின் சில பகுதியில் பெய்த அதிகப்படியான மழை காரணமாக செப்டம்பர் மாதம் உணவு பணவீக்கம் அதிகரித்தது என்று நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை பொருளாதார நிபுணரான சுமன் சௌத்ரி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications