இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் காலாண்டில் -7.5 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்துள்ளது. ஜூன் காலாண்டைத் தொடர்ந்து செப்டம்பர் காலாண்டிலும் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சி பாதையிலேயே இருக்கும் காரணத்தால் நாட்டின் பொருளாதாரம் வரலாற்றில் முதல் முறையாக ரெசிஷனுக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கி கணிப்புகள் படி இந்தியப் பொருளாதாரம் 8.5 சதவீதம் முதல் -10.5 சதவீதம் வரையில் இருக்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் தற்போது -7.5 சதவீத சரிவை மட்டுமே பதிவு செய்துள்ளது.
சந்தை கணிப்புகளை விடவும் சிறப்பான அளவீடுகளை இந்தியப் பொருளாதாரம் பதிவு செய்துள்ளது.

உற்பத்தி துறை
ஜூன் காலாண்டில் இந்தியாவின் உற்பத்தித் துறை சுமார் 39 சதவீதம் சரிந்து அதிர்ச்சியைக் கொடுத்த நிலையில், செப்டம்பர் காலாண்டில் 0.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது முதலீட்டுச் சந்தைக்கும் நாட்டின் வர்த்தகச் சந்தைக்கும் பெரிய அளவிலான நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

உலக நாடுகள்
உலகளவில் பல முன்னணி பொருளாதார நாடுகள் இந்தச் செப்டம்பர் காலாண்டில் கணிசமான வளர்ச்சியை மட்டுமே அடைந்திருந்த வேளையில், இந்தியப் பொருளாதாரம் மிகவும் குறுகிய காலகட்டத்தில் மாபெரும் சரிவில் இருந்து வேகமாக மீண்டு வருகிறது.
இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் முக்கியத்துவம் அடையும் ஒரு முக்கியக் காரணியாக உள்ளது.

பங்குச்சந்தை
சந்தை கணிப்புகளை விடவும் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ள காரணத்தாலும், இன்னமும் இந்திய எதிர்மறை வளர்ச்சி அளவீட்டிலேயே இருக்கும் காரணத்தாலும் பங்குச்சந்தையில் திங்கட்கிழமை மந்தமான சூழ்நிலை ஏற்பட அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
இதேபோல் விவசாயம், மின்சாரம் துறை சார்ந்த நிறுவனங்கள் மீது அதிகளவிலான முதலீடுகள் குவிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

அன்னிய முதலீடு
நவம்பர் மாதத்தில் இந்தியச் சந்தையில் ஏற்கனவே சிறப்பாக அன்னிய முதலீடுகள் குவிந்து வரும் நிலையில், மாதத்தின் இறுதியை அடைந்த நிலையில் அன்னிய முதலீட்டின் அளவீடுகள் கணிசமாகக் குறைந்தாலும் தொடர்ந்து முதலீடு செய்யப்படும் எனக் கணிக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை
செப்டம்பர் காலாண்டின் ஜிடிபி தரவுகள் வெளியாவதன் எதிரொலியாகவும், சர்வதேசச் சந்தையின் தாக்கத்தின் காரணமாகவும் இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் மிகவும் மந்தமாக இருந்தது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 110.02 புள்ளிகள் சரிந்து 44,149 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் நிஃப்டி 18.05 சதவீதம் சரிந்து 12,968.95 புள்ளிகளில் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.

நிதிப் பற்றாக்குறை
இதேபோல் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை அளவான 7.96 லட்சம் கோடி ரூபாய் இலக்கு இந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் நிதிப் பற்றாக்குறை அளவு 119.7 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
கொரோனா காரணமாக இந்தியா-வை போல் உலகின் பல நாடுகளில் நிதிப் பற்றாக்குறையும், கடன் அளவும் கடுமையாக அதிகரித்துள்ளது. இது அன்னிய முதலீட்டாளர்கள் மத்தியில் முக்கியக் காரணியாக விளங்கும்.