டெல்லி: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
இதற்கிடையில் இந்தியாவில் நீண்டகாலமாக நீட்டிக்கப்பட்டு வரும் லாக்டவுன் காரணமாக, ஒட்டுமொத்த வர்த்தகத்திலும் முடங்கியுள்ளது எனலாம்.
இதனால் ஏற்றுமதி இறக்குமதியில் வரலாறு காணாத அளவு வீழ்ச்சியினைக் கண்டுள்ளது. இது குறித்து CEIC ஒரு தரவினை வெளியிட்டுள்ளது, அதனை பற்றித் தான் இங்கு பார்க்கப்போகிறோம்.
ஏற்றுமதி வீழ்ச்சி
பல பிரச்சனைகளுக்கும் நடுவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி இறக்குமதி 60.3 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இது கடந்த மார்ச் மாதத்தில் 34.6 சதவீதம் வீழ்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது உள்நாட்டு தேவை வீழ்ச்சி மற்றும் உலகளாவிய லாக்டவுன் காரணமாக பல சவால்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக 22 நாடுகள் கடுமையான வீழ்ச்சியை கண்டுள்ளது.
இந்தியா தான் மோசமாக பாதிப்பு
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், மேற்கண்ட 22 நாடுகளில் இந்தியா தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. CEIC வலைதளத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த தரவின் மூலம், 22 நாடுகளில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியா தான் மிகவும் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தளவாட பற்றாக்குறை மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதுவும் ஏற்றுமதி வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.
இவர்கள் மட்டுமே வளர்ச்சி
இதில் வேடிக்கை என்னவெனில் CEIC தரவின் படி, 22 நாடுகளில் 2 நாடுகள் மட்டுமே தங்களது ஏற்றுமதியினை அதிகரித்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் சீனா 2.2% ஏற்றுமதி வளர்ச்சி கண்டுள்ளது. இதே தாய்லாந்து 5.3% ஏற்றுமதி வளர்ச்சி கண்டுள்ளது. ஆனாலும் இந்தியா -60.3% ஏற்றுமதி வீழ்ச்சியும், நேபாளம் -54.5% ஏற்றுமதி வீழ்ச்சியும், மங்கோலியா -54.4%மும், இப்படி அடுத்தடுத்த நாடுகள் பலத்த வீழ்ச்சியினை கண்டுள்ளன.
இறக்குமதியும் வீழ்ச்சி
இந்தியாவின் இறக்குமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 58.6% வீழ்ச்சி கண்டுள்ளது. இதே கடந்த மார்ச் மாதத்தில் 28.7% வீழ்ச்சி கண்டுள்ளது. ஆக ஒட்டுமொத்த வர்த்தக பற்றாக்குறையும் கடந்த இரண்டு மாதங்களில் 9.8 பில்லியன் டாலரில் இருந்து 6.8 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இது நல்ல விஷயம் தான் என்றாலும், ஏற்றுமதி குறைந்துள்ளது மிக கவளையளிக்கும் விஷயமாகவே உள்ளது.
படிப்படியாக அதிகரிக்கும்
இனி வரும் நாட்களில் ஏற்றுமதி படிப்படியாக மெதுவான வேகத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது உலகளாவிய பரவலை கட்டுப்படுத்துவதோடு உலகளாவிய தேவையிலும் இணைக்கப்படும். நாட்டில் நிலவி வரும் மந்த நிலையின் காரணமாக தேவை குறையும். உள்நாட்டு ஏற்றுமதியாளர்களின் நிதி அழுத்தமும், சிறு குறு தொழில்களில் நிலவும் அழுத்தமும், தொழிலாளர்களின் பற்றாக்குறையும் சேர்ந்து நாட்டின் வளர்ச்சியில் மேலும் அழுத்ததினை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications