இந்தியாவின் ஏற்றுமதி அளவு வரலாறு காணாத விதமாக மார்ச் மாதத்தில் சுமார் 58.23 சதவீதம் அதிகரித்து 34 பில்லியன் டாலரை அளவீட்டைத் தொட்டு உள்ளது. 2021ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் இன்ஜினியரிங், நகை மற்றும் ரத்தினங்கள், பார்மா ஆகிய துறைகள் சிறந்து விளங்கிய காரணத்தால் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் ஏற்றுமதி மார்ச் மாதத்தில் 34 பில்லியன் டாலரை தொட்டு உள்ளது.
இதேவேளையில் 2020-21ஆம் நிதியாண்டு காலகட்டத்தில் ஏப்ரல் முதல் மார்ச் 2021 வரையிலான காலகட்டத்தில் மொத்த ஏற்றுமதி மதிப்பு அளவு கடந்த நிதியாண்டை விடவும் சுமார் 7.4 சதவீதம் சரிவடைந்துள்ளது.

2019-20ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி அளவீடு 313.36 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2020-21ஆம் நிதியாண்டில் 290.18 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இந்தச் சரிவுக்குக் கொரோனாவும், கொரோனாவால் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பும் முக்கியக் காரணமாக உள்ளது.
இதேபோல் 2020-21 நிதியாண்டுக்கான இறக்குமதி அளவீடும் கடந்த ஆண்டை விடவும் 18 சதவீதம் குறைந்து 388.92 பில்லியன் டாலராக உள்ளது.
மேலும் மார்ச் மாதம் இந்தியாவின் ஏற்றுமதி அளவு 58.23 சதவீதம் அதிகரித்து 34 பில்லியன் டாலருக்கு உயர்ந்துள்ள இதேவேளையில், இறக்குமதி அளவு 52.89 சதவீகம் அதிகரித்து 48.12 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மார்ச் மாதத்தில் மட்டும் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 14.12 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இறக்குமதி மார்ச் மாத வர்த்தகப் பற்றாக்குறை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. மார்ச் மாதம் கச்சா எண்ணெய் இறக்குமதி 1.22 சதவீதம் அதிகரித்து 10.17 பில்லியன் டாலருக்கும், தங்கம் 7.17 பில்லியன் டாலருக்கும் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications