சென்னை: நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பல்வேறு ஸ்மார்ட் கருவிகளுக்கும், ஏஐ தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட கருவிகளுக்கும் செமிகண்டக்டர்களின் தேவை இன்றியமையாததாக இருக்கிறது. தற்போதைய சூழலில் நமக்கு தேவையான செமிகண்டக்டர்களை நாம் தைவான் உள்ளிட்ட நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து வருகிறோம்.
இதனிடையே செமிகண்டக்டர் துறையில் இந்தியா தற்சார்பு நிலையை அடைய வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த வகையில் டாடா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் தைவானை சேர்ந்த நிறுவனங்களோடு கூட்டாண்மை அமைத்து இந்தியாவிலேயே செமிகண்டக்டர் உற்பத்தியில் ஈடுபட தொடங்கியுள்ளன.

தமிழ்நாட்டிலும் செமிகண்டக்டர் சார்ந்த ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. செமிகண்டக்டர் துறையில் நீண்ட பணி அனுபவம் கொண்டவரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரியமான ராஜா மாணிக்கம் ஐவிபி செமிகண்டக்டர் என்ற பெயரில் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளார்.
உள்நாட்டு மின்னணு நிறுவனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை சார்ந்த நிறுவனங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரி மேலாண்மை நிறுவனங்கள் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு ஐவிபி செமிகண்டக்டர் என்ற நிறுவனத்தை அவர் தொடங்கி இருக்கிறார்.
இந்த நிறுவனம் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து சென்னையில் 20 ஆயிரம் சதுர அடிக்கு ஒரு பொதுவான சிப் சோதனை மையத்தை நிறுவ இருக்கிறது. இந்த மையத்தை மற்ற செமிகண்டக்டர் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐவிபி செமிகண்டக்டர் நிறுவனத்தை பொறுத்தவரை தைவான், அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த செமிகண்டக்டர் தயாரிப்பு நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஐவிபி செமிகண்டக்டர் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தொடக்க விழாவில் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான எஸ் கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குனர் சந்திப் நந்தூரி, தொழில்துறை செயலாளர் அருண் ராய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் இதுவரை 41 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டி உள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்த நிறுவனம் 70 மில்லியன் டாலர்கள் முதல் 100 மில்லியன் டாலர்கள் வரை வருமானம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஒரு நாளைக்கு 1.2 மில்லியன் செமிகண்டக்டர்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாகவும் 100 மில்லியன் வருமானம் ஈட்டக்கூடிய நிறுவனமாகவும் மாறும் என ராஜா மாணிக்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐவிபி செமிகண்டக்டர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்தியாவின் முதல் ஃபேப்லெஸ் (Fabless) நிறுவனமாக உருவாகியுள்ளது என தெரிவித்துள்ள ராஜா மாணிக்கம். இந்த நிறுவனம் செமிகண்டக்டர் சிப்புகளை தயாரிப்புகளாக வடிவமைக்கும் மற்றும் அதற்கான அறிவு சார்ந்த சொத்துகளை வைத்திருக்கும் ஆனால், சிப்புகளின் உற்பத்தி, அவற்றை ஒருங்கிணைப்பது, சோதனை செய்வது மற்றும் பேக்கேஜிங் ஆகியவை அவுட்சோர்சிங் முறையில் செய்யப்படும் என கூறியுள்ளார்.
story written by: Devika


Click it and Unblock the Notifications