கடந்த நிதியாண்டில் எரிபொருள் தேவையானது 9.1% அளவுக்கு, வீழ்ச்சி கண்டுள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த வீழ்ச்சியானது 1998 - 99ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக இந்த அளவுக்கு சரிந்திருப்பதாகவும் கூறியுள்ளது. மேலும் இது குறித்த PPAC அளித்த அறிக்கையில் இரண்டு தசாப்களுக்கு மேலாக இல்லாத வகையில், நாட்டில் முதன் முறையாக எரிபொருட்கள் தேவையானது இந்தளவுக்கு சரிந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும், அதே சமயம் தேவையும் குறைந்திருந்தது. எனினும் இதன் முழு பலன்களையும் அரசு வரியாக எடுத்துக் கொண்டது.
எரிபொருள் நுகர்வு
இந்த சரிவுக்கு மிகவும் முக்கிய காரணமாக அமைந்தது டீசல் தேவையில் ஏற்பட்ட சரிவு, என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் டீசல் நுகர்வானது 12 சதவீதம் குறைந்து, 72.72 மில்லியன் டன்னாகவும், இதே பெட்ரோல் நுகர்வானது 6.7 சதவீதம் குறைந்து, 27.95 மில்லியன் டன்னும் குறைந்து காணப்பட்டுள்ளது.
தேவை சரிவு
சர்வதேச அளவில் கடந்த ஆண்டு மக்களை ஆட்டிப்படைத்து வந்த கொரோனாவை, கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் நாடு தழுவிய லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல்வேறு தொழிற்துறை நடவடிக்கைள், போக்குவரத்துகள், தனியார், பொது போக்குவரத்துகள் என அனைத்தும் முடங்கின. வண்டி வாகன போக்குவரத்தும் வெகுவாக குறைந்தது. விமான சேவைகள் கூட ரத்து செய்யப்பட்டன. இத்தகைய காரணங்களினால் எரிபொருள் தேவையானது மிகக் குறைந்தது.
கேஸ் நுகர்வு மட்டும் அதிகரிப்பு
எனினும் சமையல் எரிவாயு மட்டும் இந்த காலகட்டத்தில், 4.7 சதவீதம் அளவுக்கு அதிகரித்ததாக தரவுகள் கூறுகின்றன. இது முந்தைய நிதியாண்டில் 26.33 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், கடந்த 2020 - 21ம் நிதியாண்டில் 27.59 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.
மீண்டும் தேவை பாதிக்கலாம்
கடந்த நிதியாண்டின் தொடக்கத்தில் எரிபொருள் தேவையானது மிக மோசமான சரிவினைக் கண்டாலும், பிற்பாதியில் இருந்து மீளத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த மார்ச் மாதத்தில் நல்ல ஏற்றத்தினை கண்டது. எனினும் தற்போது மீண்டும் பரவி வரும் இரண்டாம் கட்ட பரவலுக்கு மத்தியில், நிச்சயமற்ற நிலையே நிலவி வருகின்றது. இது தொடர்ந்து எரிபொருள் தேவை மீட்பு வேகத்தினை குறைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications