இந்தியாவில் அதிக அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் பூமியின் சமநிலையே மாறிவிட்டதாகவும் சுழலும் அச்சும் மாறுகிறது என்றும் ஆய்வு அறிக்கை ஒன்று எச்சரிக்கிறது.
இது தொடர்பாக நியூஸ் 18 ஆங்கில செய்தி இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தியில், உலகளவில் 25 சதவீதத்திற்கும் அதிகமான நிலத்தடி நீர் இந்தியாவில் தான் எடுத்து பயன்படுத்தப்படுகிறது, இதனால் பூமியின் சமநிலை பாதிக்கிறது என கூறுகிறது. இந்த பிரச்சனையை சரி செய்யாவிட்டால் பூமியின் பகல் மற்றும் இரவு சுழற்சியை இது சீர்குலைக்கும் என்றும் உலக அளவில் உணவு மற்றும் நீர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்றும் அந்த ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.

அதிக அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் பூமியின் அச்சு மாறி வருகிறது என பல்வேறு அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர். அதாவது நிலத்திலிருந்து நாம் நீரை உறிஞ்சி எடுக்கும்போது அது பூமியின் எடை சமநிலையை சீர்குலைக்கிறது எனக் கூறுகின்றனர். எனவே இந்த சமநிலையை பராமரிக்க பூமி முயலும் போது அச்சிலேயே மாற்றங்கள் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.
உலக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சி பயன்படுத்துவதில் இந்தியா தான் முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்தில் சீனாவும் , மூன்றாவது இடத்தில் அமெரிக்காவும் இருக்கின்றன. பூமியை ஒரு சுழலும் பந்தோடு ஒப்பிட்டால் இது புரியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 1993லிருந்து 2010 க்கு இடைப்பட்ட காலத்தில் நாசா மற்றும் பிற நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் நிலத்தடி நீரை அதிகமாக பயன்படுத்துவதால் பூமியின் வட துருவ திசை மாறியது என தெரிவிக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் சீனா ஆகிய நாடுகள் 54 ட்ரில்லியன் லிட்டர் நிலத்தடி நீரை எடுத்துள்ளன, இதன் மூலம் பூமியின் அச்சு 78 சென்டிமீட்டர் கிழக்கு நோக்கி நகர்ந்தது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 250 இல் இருந்து 260 கியூபிக் கிலோமீட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி பயன்படுத்துகிறது. உலக அளவில் 25 சதவீதத்திற்கும் அதிகமான நிலத்தடி நீரை இந்தியா தான் பயன்படுத்துகிறது.
இந்தியாவில் வேளாண்மைக்காக தான் அதிக அளவில் நிலத்தடி நீர் எடுத்து பயன்படுத்தப்படுகிறது. நீர் சேமிப்பு கட்டமைப்புகள் இல்லாததும் இதற்கு ஒரு முக்கிய காரணம். இந்தியாவை பொறுத்தவரை பஞ்சாப் ,ஹரியானா ,ராஜஸ்தான், உத்திர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தான் அதிக அளவு நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்துகின்றன. இதன் காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறதாம்.
குஜராத் மற்றும் ஹரியானாவில் ஆண்டுதோறும் நிலத்தடி நீர்மட்டம் ஒரு மீட்டர் வரை குறைவதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவின் பிரதான நகரங்களில் எல்லாம் கடுமையான தண்ணீர் பிரச்சனை ஏற்படுகிறது. பூமியின் அச்சு மாறும்போது மிகப்பெரிய அளவில் பருவநிலை மாற்றங்களை உண்டாக்கும். இதன் காரணமாக மழைக்காலம் கோடை காலம் உள்ளிட்டவற்றில் பெரிய மாற்றங்களை காண முடியும், இது தீவிரமான வறட்சி அல்லது அதிகப்படியான மழை பொழிவு என பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு பூமி அச்சு மாறும்போது அண்டார்டிகாவில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகும் வேகம் இன்னும் அதிகரித்து கடல் நீர் மட்டம் உயரும். இவ்வாறு கடல் நீர்மட்டம் உயர்ந்தால் கடலோரம் இருக்கக்கூடிய நகரங்கள் அனைத்தும் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும். மேலும் இரவு மற்றும் பகல் கால அளவு மாறும் என சொல்லப்படுகிறது. இவ்வாறு மாறும்போது நம்முடைய வாழ்க்கை சுழற்சி முறையே மாறும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications