இந்தியர்கள் மத்தியில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது மிகவும் பிரபலமாகி விட்டது. பெரும்பாலான மக்கள் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவதற்கு பதிலாக வீட்டில் இருந்த படியே அமேசான் , ஃபிளிப்கார்ட் போன்ற ஈ காமர்ஸ் செயலிகளில் ஆர்டர் போட்டு விடுகின்றனர். இது சௌகரியமாவும் பல்வேறு பொருட்களை ஒப்பிடவும் வசதியாக இருப்பதே முதல் காரணம். அதுமட்டுமில்லாமல் தள்ளுபடியுடன் பொருட்களை வாங்க முடியும்.
பெரும்பாலான ஈ காமர்ஸ் தளங்களில் வேண்டுமென்றே விலையை உயர்த்தி பின்னர் தள்ளுபடி என அறிவித்து ஏமாற்றுகின்றனர் என்ற புகார்கள் உள்ளன. இந்நிலையில் ஆன்லைன் ஷாப்பிங் முறைகளை மாற்றியமைக்க மத்திய அரசு புதிய ஈ காமர்ஸ் விதிகளை வரும் ஜனவரி 1 முதல் அமலுக்கு கொண்டு வருகிறது. ஆன்லைன் வர்த்தகத்தில் நுகர்வோரை ஏமாற்றும் முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்த கடுமையான விதிகள் நடைமுறைக்கு வர உள்ளன.

ஈ-காமர்ஸ் தளங்கள் இனி எந்தவொரு பொருளுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்படும் போது, தற்போதைய விலையுடன் சேர்த்து முந்தைய விலையை கட்டாயம் காட்ட வேண்டும். அதாவது, அந்த பொருள் தள்ளுபடி அறிவிக்கப்படுவதற்கு கடந்த 30 நாட்களுக்குள் விற்கப்பட்ட மிக குறைந்த விலை என்னவோ அதனை காட்ட வேண்டும். எனவே இது உண்மையான தள்ளுபடியா என்பதை வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள உதவும்.
Search Algorithms மற்றும் பரிந்துரை அமைப்புகள் சில குறிப்பிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு அல்லது அதிக லாபம் தரும் பொருட்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து வாடிக்கையாளர்களை திசை திருப்புகின்றன. எனவே தேடல் முடிவுகளை நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றியமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தேடும் பொருளுக்கு நேரடியான மற்றும் பொருத்தமான முடிவுகள் மட்டுமே காட்டப்பட வேண்டும் என்ற விதி நடைமுறைக்கு வருகிறது.
விளம்பர பொருட்கள் மற்றும் சாதாரண தயாரிப்புகள் எளிதில் அடையாளம் காணும் வகையில் Sponsored அல்லது விளம்பரம் என்ற குறிப்பு தெளிவாகவும் வெளிப்படையாகவும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். எனவே வாடிக்கையாளர் இது ஸ்பான்சர் செய்யப்பட்டு நமக்கு காட்டப்படுகிறது என்பதை புரிந்து கொண்டு முடிவெடுப்பார்கள்.
மேலும் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் கட்டாய கட்டணங்கள் வசூலிப்பது, தேவையற்ற இன்சூரன்ஸ் சேர்ப்பது போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டின் டார்க் பேட்டர்ன் வழிகாட்டுதல்கள் படி அனைத்து ஈ-காமர்ஸ் நிறுவனங்களும் தாங்களாகவே ஆண்டுதோறும் தணிக்கை செய்து, தங்கள் தளத்தில் நுகர்வோரை ஏமாற்றும் முறைகள் இல்லை என்பதற்கான சான்றிதழை பொதுவெளியில் சமர்ப்பிக்க வேண்டும் என புதிய விதி கூறுகிறது.
வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் இன்வாய்ஸ் அல்லது பில்லில், தயாரிப்பை விற்பனை செய்யும் உண்மையான விற்பனையாளரின் பெயர் மற்றும் விவரங்கள் தெளிவான மற்றும் முறையான எழுத்துரு அளவில் இடம்பெற வேண்டும். வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் தகவல்களை வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கு வாடிக்கையாளரிடம் சம்மதம் பெறப்பட வேண்டும் என அரசு கூறுகிறது.
மேலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில், அந்த பொருளை இறக்குமதி செய்தவர் யார் மற்றும் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது போன்ற விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் பொருட்களின் காலாவதி தேதி , வாரண்டி மற்றும் ரிட்டன் பாலிசி ஆகியவையும் வாங்குவதற்கு முன்பு தெளிவாக வாடிக்கையாளரை சென்றடைய வேண்டும் என்றும் புதிய விதிமுறை கூறுகிறது.
இந்த விதிமுறைகள் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வருவதால் ஆன்லைன் ஷாப்பிங்கில் மக்கள் ஏமாற்றப்படுவது தடுக்கப்படும். மேலும் வாடிக்கையாளர்களின் புகார்களை சரியான முறையில் கையாண்டு தீர்க்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications

