டெல்லி: சமீபத்திய மாதங்களாகவே ரிசர்வ் வங்கியின் வட்டி அதிகரிப்புக்கு மத்தியில், பணவீக்க விகிதமானது கட்டுக்குள் வந்ததாக தோன்றினாலும், மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறி விட்டது எனலாம்.
தொடர்ந்து உணவு பொருட்கள் விலை அதிகரித்து வரும் நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதம் 7.41% ஆக அதிகரித்துள்ளது.
இந்த பணவீக்க விகிதமானது தொடர்ந்து மத்திய வங்கியின் இலக்கிற்கு மேலாகவே இருந்து வருகின்றது.
வட்டி அதிகரிக்க வழிவகுக்கலாம்
சொல்லப்போனால் ரிசர்வ் வங்கியின் பணவீக்க இலக்குக்கு மேலாகவே, தொடர்ந்து 9வது மாதமாக இருந்து வருகின்றது. இது ரிசர்வ் வங்கியினை மேற்கொண்டு வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். ஏற்கனவே 5 மாதத்தில் 4 முறை வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ள ரிசர்வ் வங்கி, இந்த முறையும் கட்டாயம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஐபி தரவு
சில்லறை பணவீக்கமானது அதிகரித்துள்ள அதே வேளையில், தொழிற்துறையில் வளர்ச்சி (IIP Data) விகிதமானது ஆகஸ்ட் மாதத்தில் 0.8% சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த ஜூலை மாதத்தில் 2.4% சரிவினைக் கண்டுள்ளதையும் என்எஸ்ஓ தரவின் மூலம் அறிய முடிகிறது.
சுரங்க துறை & மின்சார உற்பத்தி
குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் சுரங்கத் துறையானது 3.9% சரிவிலும், மின்சார உற்பத்தியானது 1.45 அதிகரித்தும் காணப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 2020ல் தொழிற்துறை உற்பத்தி விகிதமானது 57.3% சரிவினைக் கண்டிருந்தது. இது கொரோனா லாக்டவுன் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கியிருந்தன. இதன் காரணமாக உற்பத்தி விகிதமும் மோசமான சரிவினைக் கண்டிருந்தது.
எரிபொருள் & மின்சார விலைகள்
இதற்கிடையில் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இந்த ஆண்டு ரூபாயின் மதிப்பும் 10% மேலாக சரிவில் காணப்படுகின்றது. இது நுகர்வோர் மற்றும் தொழிற்துறை சார்ந்த இறக்குமதி செலவினை அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் எரிபொருள் மற்றும் மின்சார விலைகள் கடந்த ஆண்டினை காட்டிலும் கடந்த மாதத்தில் 11.44% அதிகரித்துள்ளது. இது முந்தைய மாதத்தில் 10.78% அதிகரித்திருந்தது.
நுகர்வோர் விலை குறியீடு
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ராய்ட்டர்ஸ் ஆய்வறிக்கையில் நுகர்வோர் விலை குறியீடு குறித்தான பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 7.30% ஆக இருக்கலாம் என கணித்துள்ளனர்.
இந்தியாவின் பணவீக்க விகிதம் 2023 - 2024ம் நிதியாண்டில் 4% என்ற லெவலுக்கு திரும்பலாம் என சர்வதேச நாணய நிதியம் முன்னதாக ஒரு ஆய்வறிக்கையில் கூறியிருந்தது..


Click it and Unblock the Notifications