டெல்லி: நாட்டின் மொத்த வரி வசூல் மார்ச் 31 வரையிலான நிதியாண்டில் 34% அதிகரித்து, 27.07 லட்சம் கோடி ரூபாயினை எட்டியுள்ளது. இதுவே 2020 - 2021ம் நிதியாண்டில் 20.27 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது
நிறுவன வரி, சுங்க வரி, ஜிஎஸ்டி வரி வசூல் உள்ளிட்ட பல வரிகளையும் சேர்த்து மொத்தமாக அரசின் இலக்கினை கிட்டதட்ட அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அரசு 22.17 லட்சம் கோடி ரூபாயாக இலக்கு நிர்ணயம் செய்திருந்தது நினைவுகூறத்தக்கது.
இது கடந்த 23 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தினையும் எட்டியுள்ளது என மத்திய வருவாய்த் துறை செயலர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் சொத்து வரி அதிகரிப்பு.. யாருக்கு என்ன பாதிப்பு.. !

நேரடி வரி வசூல்
தனி நபர்கள் செலுத்தும் வருமான வரி பெரு நிறுவன வரி ஆகியவற்றை உள்ளடக்கிய நேரடி வரிகள் 14.10 லட்சம் கோடி ரூபாயாக வசூலாகியுள்ளது. இது கடந்த நிதியாண்டினை காட்டிலும் 49 சதவீதம் அதிகரித்துள்ளது. இது பட்ஜெட் இலக்கினை காட்டிலும் 3.02 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

மறைமுக வரி வசூல்
மறைமுக வரி வசூலானது கடந்த ஆண்டினை காட்டிலும் 48 சதவீதம் அதிகரித்து, 1.99 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது பட்ஜெட்டில் 11.02 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிட்டிருந்த நிலையில், 12.90 லட்சம் கோடி ரூபாயாக வரி வசூலாகியுள்ளது.

மத்திய சரக்கு சேவை வரி
இதேபோல மத்திய சரக்கு சேவை வரி உள்ளிட்ட வரி வகைகள் 30 சதவீதம் அதிகரித்து, 6.95 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எனினும் கலால் வரியானது 0.2 சதவீதம் குறைந்து, 3.90 லட்சம் கோடி ரூபாயாகவும் சரிவினைக் கண்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த வரி வசூலில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், மறைமுக வரி வசூலை விட, நேரடி வரி வசூல் அதிகரித்துள்ளது.

சாதனை அளவு
கடந்த 1999க்கு பிறகு தற்போது தான் ஜிடிபி மீதான வரி விகிதம் 11.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2020 - 2021ல் 10.3 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போக்கானது வரவிருக்கும் ஆண்டிலும் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. மொத்தத்தில் கடந்த நிதியாண்டில் வரி வசூலானது சாதனை அளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.