இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறையை வளர்க்கும் நோக்கத்தில், மத்திய அரசு புதிய முடிவுகளை எடுத்து வருகிறது. அதில் முக்கியமாக, இந்தியாவில் முதலீடு செய்யும் சீன நிறுவனங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வந்த மத்திய அரசு தற்போது புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சீன முதலீட்டாளர்களுக்கு பெரும் வாய்ப்பாக உள்ளது.
அதிலும் குறிப்பாக அமெரிக்கா உடனான வர்த்தக போரைச் சமாளிக்க புதிய வாய்ப்புகளைச் சீன நிறுவனங்களும், சீன முதலீட்டாளர்களும் தேடி வரும் வேளையில் மத்திய அரசு முதலீட்டுக்கான கதவுகளைக் கிட்டத்தட்ட 5 வருடத்திற்குப் பின்பு திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டுமானால், தனிப்பட்ட முறையில் முதலீடு செய்ய முடியாது. இந்திய நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து (Joint Ventures - JV) தான் முதலீடு செய்ய வேண்டும். இந்த கூட்டணி முயற்சியில் சீன நிறுவனங்களுக்கான பங்கு இருப்பு 10% -ஐ தாண்டக்கூடாது என்ற நிபந்தனை உடன் மோடி தலைமையிலான மத்திய அரசு சீன நிறுவனங்களுக்கான முதலீட்டுக் கதவுகளை விரைவில் திறக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சீன நிறுவனங்கள் இந்தியக் கூட்டுத்தொழில்களில் 10% பங்கு தான் வைத்திருக்க முடியும். இதேபோல் இந்த விதிமுறையை ஏற்று இந்தியாவில் முதலீடு செய்ய வரும் சீன நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுக்கு தங்களுடைய தொழில்நுட்பத்தைப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடும் மத்திய அரசு விதிக்கும் எனத் தெரிகிறது.
2020ம் ஆண்டில் இந்தியா-சீனா எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு மத்தியில் நடந்த மோதலுக்குப் பிறகு மத்திய அரசு சீனா முதலீடுகளுக்கு மொத்தமாகத் தடை விதித்தது. இந்த நிலையில் 5 வருடத்திற்குப் பின்பு உலகளவில் ஏற்பட்ட வர்த்தக மாற்றங்கள் ஆட்சி மாற்றங்களைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு 10 சதவீத பங்கு இருப்பு மற்றும் தொழில்நுட்ப பகிர்வு விதிமுறைகள் உடன் சீன முதலீடுகளுக்குப் பச்சைக் கொடி காட்ட உள்ளது.
சீன நிறுவனங்கள் மட்டுமல்லாமல், அண்டை நாடுகளான வியட்நாம், தைவான் நாட்டின் ஒப்பந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்தியாவில் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி சூழல் மேம்படுத்த வேண்டும் என்பதற்காகச் சீன முதலீடுகளுக்கு மத்திய அரசு அனுமதி கொடுக்கும் எனத் தெரிகிறது.
மேலும் சீனாவில் உற்பத்தி ஆலைகளை வைத்திருக்கும் அமெரிக்க அல்லது ஐரோப்பிய நிறுவனங்கள் இந்தியாவுக்கு தனது உற்பத்தி தளத்தை மாற்ற வேண்டும் என நினைத்தால், இப்பிரிவின் கீழ், சீன சப்ளையர் நிறுவனங்கள் கூட்டணி நிறுவனத்தில் 49% வரை பங்குகளை வைத்திருக்க மத்திய அரசு அனுமதிக்கிறது. ஆனால் இதற்கான அனுமதியை மத்திய அரசு முதலீட்டு விண்ணப்பத்தைத் தீவிரமாக ஆய்வு செய்து ஒப்புதலின் பெயரிலேயே அனுமதி வழங்கப்படும்.
அமெரிக்க வர்த்தக சந்தையை அடைய இந்திய நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவுகளையும் மத்திய அரசு கொடுத்த தயாராக உள்ளது. இந்த ஆண்டு பிற்பகுதியில் இந்தியா மற்றும் அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறையில் முழுவீச்சில் இந்தியா தயாராகி வருகிறது.
உலகில் பிரபலமான ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனம், தனது உற்பத்தி மையங்களைச் சீனாவிலிருந்து வெளியே மாற்ற ஆரம்பித்துவிட்டது. அந்த மாற்றத்தில் முக்கிய இடம் இந்தியாவிற்கே. இந்தியாவில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ், ஃபாக்ஸ்லிங்க், மதர்சன், பாரத் ஃபோர்ஜ், ஜபில், சால்காம்ப் போன்ற நிறுவனங்கள் தற்போது ஆப்பிள் பொருட்களுக்கான உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.
டாடா எலக்ட்ரானிக்ஸ் இப்போது ஐபோன்களுக்கான உறைகளை (enclosures) உருவாக்கி வருகிறது. தற்போது ஐபோன்-களைத் தவிர, அனைத்து முக்கிய ஆப்பிள் சாதனங்களின் உறைகளும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன.
சீன அரசின் அறிவுறுத்தலின் படி, சீன நிறுவனங்கள் துளையிடும் இயந்திரங்கள் (Drilling machines), சோலார் பேனல் உபகரணங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் (Electronic equipment's) தயாரிப்பில் இருக்கும் சீன சப்ளையர்கள் தொழில்நுட்பத்தையும், டெக் உதவிகளையும் பகிர்வதை நிறுத்தியுள்ளது. இது இந்திய உற்பத்தி துறைக்கு பெரும் பாதிப்பாக இருந்து வருகிறது.
கட்டுப்பாடு இல்லாமல் சீன முதலீடுகளை இந்தியா ஏற்றுக்கொண்டால், இந்தியா வியட்நாம் போல மாறிவிடும் என்பதை உணர்ந்தே சீன முதலீடுகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் உற்பத்தி துறையில் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல தொழில்நுட்ப தேவை இருக்கும் காரணத்தால் தற்போது சீன முதலீடுகளுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் டெக் இந்தியாவுக்கு அவசியமா..? உதாரணமாக Drilling machine நிறுவனங்கள் ஜெர்மனியை சேர்ந்தாக இருந்தாலும், சீனாவில் தான் இந்த இயந்திரத்திற்கான உதிரிப்பாகங்கள், முழு தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படி ஒவ்வொரு துறையிலும் சீனா-வின் சப்ளை செயின் தான் சர்வதேச உற்பத்தி துறையை இயக்கி வருகிறது.
இந்த புதிய கொள்கை மாற்றங்கள், உலக வர்த்தகத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications