ஈரான் போர் காரணமாக இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாடு நீடிக்கிறது. தற்போது வணிக சிலிண்டர் விநியோகத்தில் மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் வழக்கம் போல நடைபெறுகிறது.
எல்பிஜி போல பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது. குறிப்பாக நேற்று மற்றும் அதற்கு முன் தினம் குஜராத், தெலங்கானா மாநிலங்களில் எல்லாம் திடீரென பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரவி பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் குவிந்தனர்.

போதிய அளவு பெட்ரோல் கையிருப்பு இருக்கிறது என அரசும் , எண்ணெய் நிறுவனங்களும் கூறினாலும் திடீரென மக்களிடையே பதற்றமும் அச்சமும் ஏற்பட்டுவிடுகிறது. இதற்கு சமூகவலைதளங்களில் பகிரப்படும் தவறான பதிவுகள் கூட காரணமாகி விடுகின்றன. இந்த சூழலில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டின் அனைத்து பெட்ரோல் நிலையங்களும் போதிய பெட்ரோல், டீசல் கையிருப்புடன் முழுமையாக செயல்படுகின்றன என கூறியுள்ளது.
சில நாடுகளில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு இருக்கிறது, அங்கெல்லாம் Energy Emergency அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் Energy Emergency சூழலுக்கு வாய்ப்பே இல்லை என தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் தவறாக பகிரப்படும் வீடியோ, படங்களே மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன என கூறியுள்ளது. இந்தியாவிடம் போதிய பெட்ரோல் , டீசல் இருப்பு உள்ளது, அடுத்த 60 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் வரத்து உறுதி செய்யப்பட்டுள்ளது, 40க்கும் அதிகமான சப்ளையர்களிடம் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வந்து கொண்டிருக்கிறது என கூறியுள்ளது.அடுத்த 2 மாதங்களுக்கு ஒட்டுமொத்த நாட்டிற்கும் தேவையான பெட்ரோல், டீசல் கையிருப்பில் உள்ளது என மக்கள் பதற்றம் கொள்ளவே தேவையில்லை என அரசு கூறியுள்ளது.

உள்நாட்டில் எல்பிஜி உற்பத்தி அதிகரிப்பு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து எல்பிஜி கொள்முதல் என அரசு அடுத்தடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதால் வீட்டு உபயோக எல்பிஜிக்கும் தட்டுப்பாடு இல்லை என கூறியுள்ளது. ஒவ்வொரு நாளும் இந்தியாவை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் 50 லட்சம் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன என கூறியிருக்கும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் வணிக சிலிண்டர் ஒதுக்கீடும் 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என கூறி இருக்கிறது.
எல்பிஜி தட்டுப்பாடு இருப்பதால்தான் பிஎன்ஜி பயன்பாட்டை அரசு கட்டாயப்படுத்துகிறது என சொல்லப்படுவது தவறு எனக் கூறியிருக்கும் அரசு நாட்டில் போதிய அளவு எல்பிஜி இருப்பு இருக்கிறது என கூறியுள்ளது. நாட்டில் எல்பிஜி, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இருக்கிறது என சமூக வலைதளங்களில் தவறான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது , வேறு நாடுகளில் மக்கள் வரிசைகளில் காத்திருப்பதை இந்தியா எனக் குறிப்பிட்டு தவறான தகவல்களை பரப்புவது உள்ளிட்டவை தவறு என கூறியுள்ளது.
நாட்டில் எரிபொருள் கட்டுப்பாடு நிலவுவதாக போலியான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. இது போன்ற போலியான தகவல்கள் மக்கள் மத்தியில் பதற்றங்களை உருவாக்குகிறது சமூக அமைதியை குலைக்கிறது என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. எனவே தவறான தகவல்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் தகவல்களை பரப்பினால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருக்கிறது.


Click it and Unblock the Notifications