உலகின் மிகப்பெரிய பாமாயில் இறக்குமதியாளரான இந்தியாவில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு பாமாயிலின் இறக்குமதி குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதிகரித்து வரும் விலையாகும். கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு பாமாயிலின் விலை உயர்ந்துள்ளது. அதேபோல சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியும் கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது என்று முன்னணி வர்த்தக அமைப்பு வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்தது.
அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் இந்தியாவில் வாங்கும் திறன் குறைந்துள்ளது. இதன் காரணமாக பாமாயிலின் முக்கிய உற்பத்தியாளரான இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் அதன் அளவு அதிகரித்துள்ளது. இது முக்கியமாக எதிர்காலத்தை பாதிக்கலாம்.

இந்த இறக்குமதி குறைவுக்கு ஒரு முக்கிய காரணம் என்று பார்த்தால் பாமாயில், சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகிய எண்ணெய்களின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியது. இதன் காரணமாக சமையல் எண்ணெய் விலை 25 ரூபாய் வரை உயர்ந்தது. இறக்குமதி வரி என்பது ஒவ்வொரு பொருட்களை பொறுத்து மாறுபடும்.
நம் நாட்டில் தயாரிக்கப்படாத பொருட்களுக்கு நாம் பிற நாடுகளையே நம்பி இருக்கிறோம். அதில் சில உணவுப் பொருட்களும் அடங்கும். அப்படி இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மத்திய அரசு வரி விதிக்கிறது. உலகிலேயே அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் நாடுகளில் இந்தியா தான் முதலிடம் வகிக்கிறது. சுமார் 70% எண்ணெயை இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது.
செப்டம்பர் மாதத்தில் பாமாயிலின் இறக்குமதி 33 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்து 527,314 மெட்ரிக் டன் ஆக உள்ளது என்று சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா (SEA) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அதிகமாக பாமாயில் இருப்பு உள்ளது மற்றும் மலேசியாவில் பாமாயிலின் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு ஆகியவையும் குறைந்த அளவிலான இறக்குமதிக்கு வழி வகுத்ததாக SEA தெரிவித்துள்ளது.
சோயாபீன்ஸ் எண்ணெயின் இறக்குமதியும் 15.4% குறைந்து 384,382 டன்னாக உள்ளது. அதேபோல சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியும் 46.2% குறைந்து 152,803 டன்னாக குறைந்துள்ளது. இது 10 மாதங்களில் இல்லாத அளவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது
இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதி 30 சதவீதம் குறைந்து 1.1 மில்லியன் டன்களாக உள்ளது என்று SEA அமைப்பு தெரிவித்துள்ளது. இறக்குமதி குறைந்ததால், நாட்டின் எண்ணெய் இருப்பு ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த 2.93 மில்லியன் டன்னிலிருந்து 2.45 மில்லியன் டன் ஆகக் குறைந்துள்ளது என்று SEA தரவு காட்டுகிறது.
இந்தியா முக்கியமாக இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து பாமாயில் வாங்குகிறது. அதே நேரத்தில் அர்ஜென்டினா, பிரேசில், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் இருந்து சோயா எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்-ஐ இறக்குமதி செய்கிறது.
நம் நாட்டில் செய்யப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பலகாரங்களில் பெரும்பாலானவை எண்ணெயை கொண்டு செய்யப்படும் உணவுகளாகும். அதுவும் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் நாட்டில் சமையல் எண்ணெயின் தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அக்டோபர் மாதத்தில் பாமாயில் இறக்குமதி 7 லட்சம் டன்களுக்கு மேல் உயரலாம் என்று புதுடெல்லியைச் சேர்ந்த டீலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications