உயர்ந்து வரும் பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக உலகெங்கும் உள்ள பெரிய நிறுவனங்களில் பணியாளர் குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பணியாளர்கள் தங்கள் சம்பள உயர்வை எதிர்பார்க்காமல் தான் இனி வரும் ஆண்டுகளில் பணி செய்ய வேண்டும் என்ற நிலை உலகின் பல நிறுவனங்களில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2023ஆம் ஆண்டில் எந்தெந்த நாடுகளில் உள்ள நிறுவனங்கள் சம்பள உயர்வை அறிவிக்கும் என்று எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம்
2023ஆம் ஆண்டிலும் இரண்டாவது ஆண்டாக பணவீக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார மந்த நிலை காரணமாக நிறுவனங்கள் மோசமான செயல்பாடுகளை சந்திக்கலாம் என்றும் அதனால் பல நாடுகளில் உள்ள நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவிக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஊதிய உயர்வு
ஆனால் அதே நேரத்தில் உலகில் அளவில் ஒருசில நாடுகளில் தற்போதைய ஊதியத்தை விட அதிக ஊதியம் அளிக்கும் என்றும், அந்நாடுகளின் பட்டியல் கணக்கிடப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. அவற்றில் இந்தியாவும் ஒன்று என்பது ஆச்சரியமான ஒன்றாகும்.
இந்தியாவில் சம்பள உயர்வு
பணவீக்கம் அதிகமாக இருந்தாலும் இந்தியாவின் தொழில் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக இந்திய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு வழக்கம்போல் சம்பள உயர்வை அறிவிக்கும் என்று கருத்துக்கணிப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிரிட்டன்
2022 ஆம் ஆண்டை பொருத்தவரை பிரிட்டன் நாட்டின் ஊழியர்களுக்கு ஒரு மோசமான ஆண்டாக சொல்லலாம். சராசரியாக அந்நாட்டின் ஊழியர்களுக்கு 3.5 சதவீதம் ஊதிய உயர்வு இருந்தாலும் 9.1% ஊழியர்களுக்கு பணவீக்கம் காரணமாக ஊதியம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 2023ஆம் ஆண்டிலும் பிரிட்டனில் உள்ள 4% ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா
அமெரிக்காவிலும் இந்த ஆண்டு 4.5 சதவீத பணவீக்கம் காரணமாக சம்பளங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஆண்டும் இது தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய நாடுகள்
உலக அளவில் சம்பளத்தை அதிகரிக்கும் 10 நாடுகளில் 8 நாடுகள் ஆசியாவில் உள்ளது என்பதும் அதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்பதும் வியப்புக்குரிய ஒரு அம்சமாகும்.
இந்திய தொழில் நிறுவனங்கள்
இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் குறிப்பாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எதிர்காலத்தை திட்டமிட்டு லாபத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதால் இந்திய நிறுவனங்கள் பணவீக்கம் அதிகரித்தாலும் சம்பள குறைப்பு என்ற பிரச்சினையை சந்திக்காது என்று கருத்துக்கணிப்பு அறிக்கை ஒன்று கூறுகிறது.
தொழிலாளர்கள்
எனவே இந்தியாவில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலர் வேலை இழப்பை சந்திக்க மாட்டார்கள் என்றும் அதுமட்டுமின்றி வழக்கம்போல் ஊதிய உயர்வையும் பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
10 நாடுகள்
2023 ஆம் ஆண்டில் சம்பள உயர்வை எதிர்பார்க்கும் முதல் பத்து நாடுகளின் பட்டியல் இதோ:
இந்தியா (4.6%)
வியட்நாம் (4.0%)
சீனா (3.8%)
பிரேசில் (3.4%)
சவுதி அரேபியா (2.3%)
மலேசியா (2.2%)
கம்போடியா (2.2%)
தாய்லாந்து (2.2%)
ஓமன் (2.0%)
ரஷ்யா (1.9%)


Click it and Unblock the Notifications