பிரான்ஸிடமிருந்து 26 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. மத்திய அரசு இந்திய கடற்படையை வலுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது .இதன் ஒரு பகுதியாக பிரான்ஸிடமிருந்து 26 ரபேல் கடற்படை போர் விமானங்களை வாங்குவது என கடந்த மாதம் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவால் முடிவு எடுக்கப்பட்டது. இதனை அடுத்து மத்திய அமைச்சரவையும் இதற்கு ஒப்புதல் அளித்தது.
இதன் அடிப்படையில் ஏப்ரல் 28ஆம் தேதி அன்று பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி பிரான்ஸ் அரசு 26 ரபேல் கடற்படை போர் விமானங்களை இந்தியாவிற்கு தயாரித்து வழங்க இருக்கிறது. இதற்காக இந்தியா 63,000 கோடி ரூபாயை பிரான்ஸுக்கு வழங்க இருக்கிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு காணொளி முறையில் நடைபெற்றது.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக கலந்து கொண்டார். முன்னதாக இந்திய கடற்படைக்கு போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக பல்வேறு நிறுவனங்களிடமிருந்து விலை விவரம் பெறப்பட்டது . இதில் பிரான்சின் ரபேல் போர் விமானமும் , அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தின் சூப்பர் ஹார்னெட் விமானமும் பங்கேற்றன.
இதில் இந்தியாவின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் அதே நேரத்தில் பொருத்தமான விலையில் இருந்ததன் காரணமாக ரபேல் போர் விமானத்தை வாங்குவது என முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பராமரிப்பு பிரச்சினை காரணமாக இந்திய கடற்படையில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் MIG 29 கே ரக போர் விமானங்கள் எதிர்பார்த்த செயல் திறனை வெளிப்படுத்தவில்லை என சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே அரசு புதிதாக போர் விமானங்களை வாங்குகிறது.
இந்திய கடற்படையில் தற்போது ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகிய விமானம் தாங்கிப்போர் கப்பல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த போர்க்கப்பல்களில் MIG 29 கே ரக போர் விமானங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவை ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டவை. பிரான்ஸிடம் இருந்து ரபேல் விமானங்கள் வந்த உடன் இவை மாற்றப்படும் என சொல்லப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் படி இந்திய கடற்படைக்கு பிரான்ஸ் அரசு ஒரு இருக்கை கொண்ட 22 ரபேல் போர் விமானங்களையும், இரண்டு இருக்கை கொண்ட 4 போர் விமானங்களையும் வழங்க இருக்கிறது . ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து 37 முதல் 65 மாதங்களுக்குள் 26 ரபேல் போர் விமானங்களும் இந்தியாவிற்கு வழங்கப்படும்.
ஏற்கனவே 2016 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தின் கீழ் வாங்கப்பட்ட 36 ரபேல் ஜெட் விமானங்கள் இந்திய விமானப்படையில் பயன்பாட்டில் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications