LPG ஒப்பந்தம்.. UAE, ரஷ்யாவை விடுத்து அமெரிக்க பக்கம் இந்தியா போக இப்படியொரு காரணம் இருக்கா..?

இந்தியா தனது எரிசக்தி தேவையை காலம் காலமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதன் வாயிலாகவே பூர்த்தி செய்து வருகிறது. சொல்லப்போனால் இந்திய மக்களின் வரி பணத்தில் பெரும் பகுதி கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதி செய்வதற்காகவே செலவிடப்படுகிறது. இதனால் இந்தியா எப்போதும் எந்த நாடு குறைவான விலையில் சப்ளை செய்கிறதோ இந்த நாட்டிடம் வாங்குவது வழக்கம்.

இப்படி இந்தியாவுக்கு காலம் காலமாக வளைகுடா நாடுகள் உறுதுணையாக இருந்து வந்த நிலையில், கடந்த 5 வருடமாக ரஷ்யா இந்தியாவுக்கு அதிகப்படியான தள்ளுபடி உடன் கச்சா எண்ணெய் சப்ளை செய்து வந்தது. இப்படியிருக்கையில் அமெரிக்கா ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடையின் காரணமாக, முதல் முறையாக இந்தியா அமெரிக்காவிடம் இருந்து எரிவாயு வாங்கும் ஒப்பந்தம் செய்தது. இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் எதற்காக செய்யப்பட்டது தெரியுமா..? இந்தியாவுக்கு இதன் மூலம் என்ன லாபம்..? முழு கதையும் தெரிஞ்சிக்கோங்க.

LPG ஒப்பந்தம்.. UAE, ரஷ்யாவை விடுத்து அமெரிக்க பக்கம் இந்தியா போக இப்படியொரு காரணம் இருக்கா..?

ஒப்பந்த விபரம்
இந்திய எரிவாயு இறக்குமதி வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த ஒப்பந்தம். அமெரிக்காவிலிருந்து திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) இறக்குமதி செய்ய முதல் முறையாக ஒரு வருட காலத்துக்கு நிலையான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது இந்தியா. பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒரு ஆண்டுக்கு சுமார் 22 லட்சம் டன் எல்பிஜியை இறக்குமதி செய்ய உறுதி செய்துள்ளன. இது இந்தியாவின் மொத்த எல்பிஜி இறக்குமதியில் கிட்டத்தட்ட 10 சதவீதம் ஆகும். இந்த நிலையில் மத்திய பெட்ரோலியம் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இந்த ஒப்பந்தத்தை "வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் ஒப்பந்தம்" என்று பாராட்டியுள்ளார்.

அமெரிக்காவுடனான வர்த்தக உறவு
இந்தியாவும் அமெரிக்காவும் தற்போது பரந்த அளவிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசி வரும் நிலையில் இந்த எல்பிஜி ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்தாக உள்ளது. அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக உபரி (Trade Surplus) குறைக்க வேண்டும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியிருந்தார். அதனால் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்திருந்தார்.

தற்போதைய அரசின் தரவுகளின்படி ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் அமெரிக்காவுடனான வர்த்தக உபரி 1.45 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இந்த எல்பிஜி ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக சமநிலையை சீராக்க உதவும் ஒரு முக்கிய ஆயுதமாக உள்ளது.

இந்தியாவுக்கு அமெரிக்க எல்பிஜி செட்டாகாது?
இந்திய வீடுகளில் 62 சதவீதம் பேர் சமையலுக்கு எல்பிஜி பயன்படுத்துகின்றனர். நாம் பயன்படுத்தும் எல்பிஜியில் 90 சதவீதம் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருகிறது. அமெரிக்கா உலகின் மிகப்பெரிய எல்பிஜி உற்பத்தியாளராக இருந்தாலும் இதுவரை நாம் அங்கிருந்து பெரிய அளவில் இறக்குமதி செய்யவில்லை.

காரணம் இந்தியாவில் பயன்படுத்தப்படும் அடுப்புகளுக்கு பியூட்டேன் (Butane) அதிகம் கலந்த எல்பிஜி தான் பொருத்தமானது. மத்திய கிழக்கு எல்பிஜி அதிகம் பியூட்டேன் கொண்டது. ஆனால் அமெரிக்க எல்பிஜி பெரும்பாலும் புரோபேன் (Propane) அதிகம் கொண்டது. இந்தியாவின் வெப்பமான காலநிலையிலும் சமையல் பழக்கத்திற்கும் புரோபேன் அதிகம் உள்ள எல்பிஜி சரியாக இருக்காது.

உலக அரசியல் மாற்றங்கள்
அமெரிக்கா-சீன வர்த்தகப் போர் காரணமாக சீனா அமெரிக்க எல்பிஜியை வாங்குவதை நிறுத்தியது. அதனால் சர்வதேச சந்தையில் அமெரிக்க எல்பிஜி இருப்பு அதிகமாகி அதன் விலை குறைந்தது. கடல் வழி போக்குவரத்து செலவு அதிகமாக இருந்தாலும் அமெரிக்க எல்பிஜி இந்தியாவுக்கு மலிவாகக் கிடைத்தது.

அதே சமயம் ஈரான்-இஸ்ரேல் மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் மத்திய கிழக்கு எல்பிஜி கப்பல் கட்டணம், போர்க்கால ஆபத்து காப்பீடு காரணமாக இதன் விலையும் உயர்ந்தது. இதனால் அமெரிக்க எல்பிஜி விலை மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் இந்தியாவுக்கு சாதகமாக மாறியது.

விலையில் மாற்றம்
இதுவரை இந்தியா சவுதி அராம்கோ நிறுவனத்தின் விலையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எல்பிஜி வாங்கி வந்தது. இப்போது அமெரிக்காவின் மாண்ட் பெல்வியூ (Mont Belvieu) விலையையும் அடிப்படையாகக் எடுத்துக்கொள்ள முடியும். இந்த இரட்டை அடிப்படை முறை உலக சந்தையில் போட்டியை அதிகரித்து விலையைக் குறைக்க உதவும். பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் ஒரு பகுதியில் பிரச்சினை வந்தாலும் விநியோகம் பாதிக்காது. இது பல வகையில் இந்தியாவுக்கு சாதகமாக மாறியுள்ளது.

வீட்டு சிலிண்டர் விலை குறையுமா?
அமெரிக்காவில் மலிவான விலையில் அமெரிக்க எல்பிஜி வந்தாலும் உடனடியாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைய வாய்ப்பு இல்லை. ஏனெனில் சிலிண்டர் விலை மத்திய அரசால் கட்டுப்படுத்தப்படுகிறது. பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒரு சிலிண்டருக்கு சராசரியாக ரூ.220 நஷ்டத்தை எதிர்கொண்டு வர்த்தகம் செய்யும் வேளையில் அமெரிக்காவுடனான ஒரு ஆண்டு ஒப்பந்தம் நஷ்டத்தின் அளவை குறைக்கலாம். 2025 நிதியாண்டில் மொத்த நஷ்டம் ரூ.41,270 கோடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசுக்கு நன்மை
அமெரிக்கா உடனான ஒப்பந்தம் மூலம் எல்பிஜி இறக்குமதி செலவு குறைவதால் அரசு, பொதுத்துறை நிறுவனக்களுக்கு கொடுக்கும் மானியத் தொகை குறையும். இது பட்ஜெட்டில் வேறு திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்க உதவும். இதேபோல தான் மத்திய அரசு பெட்ரோல், டீசலில் எத்தனால் கலப்பது மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து வருகிறது.

இந்த ஒப்பந்தம் வெறும் எரிவாயு இறக்குமதி அல்ல, இந்தியாவின் பொருளாதார உறுதியை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கை என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். அமெரிக்காவுடனான வர்த்தக உறவு மேலும் வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அமெரிக்கா - இந்தியா மத்தியிலான வர்த்தக உபரியை குறைத்து ரெசிப்ரோக்கல் வரியை குறைக்க வழிவகுக்கும் எனவும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+