ஈரானில் ஒரு மாதமாக போர் நீடிப்பதால் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வரத்து குறைந்திருக்கிறது. வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டிய நிலை இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
போர் தொடங்கும் முன்பு வரை ஒரு பேரல் கச்சா எண்ணெய் 80 முதல் 90 டாலருக்கே கிடைத்தது ஆனால் தற்போது கிட்டத்தட்ட 160 டாலர் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. வழக்கமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் மற்றும் எல்பிஜி விலைகளை உயர்த்தி விடும். ஆனால் தற்போது பல மடங்கு கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருந்தாலும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையில் கை வைக்கவில்லை.

ஏற்கனவே மக்கள் மத்தியில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவி வருவதால் மேற்கொண்டு சிக்கலை ஏற்படுத்த வேண்டாம் என்பதற்காக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யவில்லை. கடந்த வாரம் ப்ரீமியம் பெட்ரோல் விலை மட்டும் உயர்த்தப்பட்டது. சாதாரண பெட்ரோல் விலை மாறாமல் அப்படியே இருக்கிறது.
இதற்கிடையே இந்தியாவின் தனியார் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிறுவனமான நயாரா எனர்ஜி நேற்றைய தினம் தங்களுடைய பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சற்றே உயர்த்தியது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும் டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும் உயர்த்தப்பட்டது.
இந்த சூழலில் நயாரா நிறுவனத்தை பின்தொடர்ந்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி விடுமோ என மக்கள் அச்சம் அடைந்தனர். ஆனால் இனி அந்த அச்சம் தேவையில்லை. ஏனெனில் மத்திய அரசு பொதுமக்களுக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் பெரிய அளவில் நிவாரணம் தரக்கூடிய வகையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்துவிட்டது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பெட்ரோல் மீது விதிக்கப்பட்டு வந்த கலால் வரி 13 ரூபாயில் இருந்து 3 ரூபாய் என குறைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது பெட்ரோல் மீதான கலால் வரியில் 10 ரூபாயி குறைத்துள்ளது. அதே போல டீசலுக்கு விதிக்கப்பட்டு வந்த கலால் வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் என விதிக்கப்பட்ட கலால் வரி பூஜ்ஜியமாக மாற்றப்பட்டுள்ளது.
இது உடனடியாக அமலுக்கு வருவதாக அரசு தெரிவித்திருக்கிறது. வரி சுமை குறைந்திருப்பதால் எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வு முடிவினை எடுக்காது. எண்ணெய் நிறுவனங்களுக்கு இது நற்செய்தி. அதே போல வாகன ஓட்டிகளுக்கும் போர் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயருமோ என்ற கவலை இனி தேவையில்லை. அதேவேளையில் வரி குறைந்திருப்பதால் தற்போதைக்கு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காது அதே வேளையில் உயர்த்தவும் செய்யாது என்பதே வாகன ஓட்டிகளுக்கு கிடைத்திருக்கும் நிவாரணம்.


Click it and Unblock the Notifications