இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இப்போது ஸ்மார்ட் போன்களை தான் பயன்படுத்துகின்றனர். 5 ஜி தொழில்நுட்பம், ஸ்மார்ட் போன்கள், நவீன செயலிகள் என ஸ்மார்ட் போன் தேவை என்பது முன்பை விட அதிகரித்துவிட்டது. அந்த வகையில் ஸ்மார்ட் போன் நிறுவனங்களுக்கு இந்தியா மிகப்பெரிய சந்தை.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அண்மை காலமாக சத்தமில்லாமல் ஒரு மாற்றம் நிகழ்ந்து வருகிறது. பெரும்பாலான மக்கள் அதனை கவனிக்க தவறிவிட்டோம். 10 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் ஸ்மார்ட் போன்கள் இப்போது கிடைப்பதே இல்லை. அப்படி இருந்தாலும் அதில் மிக குறைவான அடிப்படை வசதிகள் மட்டுமே உள்ளன. அதாவது இந்திய சந்தையில் 10,000 ரூபாய்க்கு கீழ் உள்ள பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் படிப்படியாக மறைந்து வருகின்றன.

இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான சரிவை சந்தித்துள்ளதாக பிஸ்னஸ் டுடே செய்தி கூறுகிறது. குறிப்பாக, சாதாரண மக்களின் பயன்பாட்டில் இருந்த 10,000 ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை சந்தையில் வேகமாக குறைந்து வருவது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் வெளியான தரவுகளின்படி, இந்தியாவின் ஸ்மார்ட்போன் விற்பனை கணிசமாக குறைந்துள்ளதாம். கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவே மிக குறைந்த அளவாகும். ஒரு காலத்தில் ஸ்மார்ட்போன் சந்தையின் முதுகெலும்பாக இருந்த என்ட்ரி-லெவல் எனப்படும் பட்ஜெட் போன்களின் பங்கு தற்போது மிகவும் சரிந்துள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை அளவு 11% வரை குறைந்துளது. அதாவது 33.2 மில்லியன் போன்களே விற்பனையாகியுள்ளன. அதே வேளையில் போன்களின் சராசரி விற்பனை விலை 14% உயர்ந்துள்ளது. குறிப்பாக 10,000 ரூபாய்க்கு கீழ் உள்ள போன்களின் விற்பனை மொத்த விற்பனையில் 18%இல் இருந்து 8% ஆக குறைந்துள்ளது.
இதற்கு ஸ்மார்ட் போன் நிறுவனங்களே காரணம். ஏனெனில் 10,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரிப்பது நிறுவனங்களுக்கு லாபகரமானதாக இல்லை என சொல்லப்படுகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைகளால், குறைந்த விலையில் 5G, உயர்தர கேமரா, டிஸ்பிளே போன்ற வசதிகளை வழங்குவதில் நிறுவனங்களுக்கு உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.
குறிப்பாக உதிரி பாகங்களின் விலை உயர்வு மற்றும் இதர சந்தை காரணிகளால், மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வது நிறுவனங்களுக்கு சவாலாக உள்ளது. நுகர்வோரும் பிரீமியம் வசதிகளை கொண்ட போன்களையே விரும்புகின்றனர் என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக பட்ஜெட் போன்கள் உற்பத்தியே குறைக்கப்பட்டுள்ளது.
இதனால், குறைந்த பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் சாமானிய மக்கள் தங்களுக்கு பிடித்தமான பிராண்டுகளில் போன்களை தேர்வு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் ஒரு முக்கிய திருப்பமாகும். பட்ஜெட் ரக போன்கள் குறைந்து வருவதால் , இனி வரும் காலங்களில் ஸ்மார்ட்போன் வாங்குபவர்கள் அதற்காகவே குறிப்பிட்ட தொகையை செலவு செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள். இதுவும் நமக்கு பெரிய தலைவலி தான்.
ஒரு வீட்டில் குழந்தைகள் தவிர அனைவருமே ஸ்மார்ட்போன்கள் வைத்திருக்கின்றனர். இனி போன் வாங்கவே கணிசமான பணம் தேவைப்படும். அதாவது பட்ஜெட் போன்கள் கிடைக்காமல் பிரீமியம் ரக போன்களே வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.


Click it and Unblock the Notifications

