இந்தியாவில் பொதுவாகவே நவராத்திரி பண்டிகை காலத்தில் வாகனங்கள் விற்பனை அமோகமாக இருக்கும். அதுவும் இந்த ஆண்டு நவராத்திரியின் ஒன்பது நாளும் வாகன விற்பனை டீலர்களுக்கு ஜாக்பாட் தான்.
நடப்பாண்டு நவராத்திரி பண்டிகை காலத்தில் இந்திய ஆட்டோமொபைல் சந்தை வரலாறு காணாத அளவுக்கு சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளது. வாகன விற்பனையாளர்களின் கூட்டமைப்பான FADA வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, நவராத்திரியின் 9 நாட்களில் மட்டும் நாடு முழுவதும் மொத்தம் 10.32 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதாவது பண்டிகை காலத்தில் ஒவ்வொரு விநாடிக்கும் ஒரு வாகனத்திற்கு மேல் விற்பனை என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இது சராசரியாக நிமிடத்திற்கு 80 வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு சமமாகும். ஒரு நாளைக்கு 1.15 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே நவராத்திரி காலத்தில் 10.12 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. நடப்பாண்டில் இந்த விற்பனை 1.9 சதவீதம் அதிகரித்து 10.32 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டு வாகன விற்பனை உயர்ந்ததற்கு முக்கிய காரணம், இரு சக்கர வாகனங்கள்தான். நவராத்திரி காலத்தில் மட்டும் மொத்தம் 7.60 லட்சம் இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது ஒட்டுமொத்த வாகன விற்பனையில் சுமார் 73.6 சதவீத பங்கை வகிக்கிறது.
இரு சக்கர வாகனங்களின் விற்பனை அதிகரித்திருந்தாலும், கார்கள் மற்றும் எஸ்யூவி போன்ற பயணிகள் வாகனங்களின் சில்லறை விற்பனையில் சற்று சரிவு காணப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் சுமார் 1.72 லட்சம் பயணிகள் வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 13.66% குறைவு என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் பண்டிகை காலத்தில் பொதுமக்கள் புதிய வாகனங்களை வாங்குவது சுபமாக கருதப்படுவதால், இத்தகைய பெரும் விற்பனை வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வாகன விற்பனை நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்தன. இதுவும் வாகன விற்பனை உயர காரணம்.
வணிக ரீதியாக பயன்படுத்தும் வாகனங்கள் விற்பனை 14% அதிகரித்துள்ளது. டிராக்டர்கள் விற்பனை 8.87% என உயர்வு கண்டுல்ளது. அதே போல கட்டுமான உபகரணங்கள் விற்பனை 10.86% உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜிஎஸ்டி குறைப்பால வாகன விற்பனை அமோகமாக இருந்தது. குறிப்பாக கார்கள் விற்பனை அதிகரித்தது. அதுவே இந்த ஆண்டு பெட்ரோல், டீசல் விலைகள், விலைவாசி உயர்வு என ஈரான் போரின் கடுமையான தாக்கங்களை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். இதுவும் கூட கார் விற்பனை சரிய காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications

