இந்தியர்களின் பெரும்பாலான உணவுகள் எண்ணெய் கொண்டு சமைப்பவையாக தான் இருக்கின்றன. அந்த வகையில் நம் வீட்டு மளிகை பொருட்கள் பட்டியலில் ஒவ்வொரு மாதமும் சமையல் எண்ணெய்க்கு முக்கிய இடம் உண்டு. சன் பிளவர் ஆயில் , பாமாயில் , ரைஸ் பிரான் ஆயில், ரீஃபைண்டு ஆயில், நல்லெண்ணெய் என பல்வேறு சமையல் எண்ணெய்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.
சமையல் எண்ணெய் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மிக நூதமான முறையில் ஒரு உத்தியை கையாண்டு மக்களை ஏமாற்றி அதிக லாபம் பார்க்கின்றன. வழக்கமாக நாம் கடையில் ஒரு லிட்டர் ஆயில் எனக்கூறி எண்ணெய் வாங்குகிறோம். ஆனால் உண்மையில் அது ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்டிருக்கிறதா என்பதை நம்மில் பெரும்பாலானவர்கள் பரிசோதனை செய்து பார்ப்பதில்லை. ஏனெனில் பல்வேறு நிறுவனங்களும் ஒரு லிட்டர் எண்ணெய் விற்பனை செய்வது கிடையாது.

பாக்கெட்டின் ஒரு ஓரத்தில் பார்த்தால் அது 900 கிராம், 850 கிராம் என்று தான் அளவு போடப்பட்டிருக்கும். மக்கள் அந்த அளவை கவனிக்காமல் ஒரு லிட்டர் என நினைத்து வாங்கி பயன்படுத்துகிறோம். அதாவது ஒரு நிறுவனம் 1 லிட்டர் எண்ணெயை 200 ரூபாய்க்கு விற்கிறது மற்றொரு நிறுவனம் 180 ரூபாய்க்கு விற்கிறது என வைத்து கொள்வோம். உண்மையில் பாக்கெட் அளவை பார்த்தால் 180 ரூபாய் எண்ணெய் அளவு 900 கிராம்களாக தான் இருக்கும். நுகர்வோர் இதுவும் ஒரு லிட்டர் என நினைத்து வாங்குவார் அதாவது மறைமுகமாக ஏமாற்றப்படுவார்.
ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு அளவை வைத்து சமையல் எண்ணெய் விற்பனை செய்வதால் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர் என்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. பொதுமக்கள் விலையை எளிதாக ஒப்பிட்டு பார்க்கும் வகையில் சமையல் எண்ணெய் விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்கள் 9 வகையான நிலையான பாக்கெட்ட அளவுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
இதன்படி இந்தியாவில் இனி ஒன்பது வகையான நிலையான பாக்கெட் அளவுகளில் மட்டுமே சமையல் எண்ணெய் கிடைக்கும். 200 மில்லியன் / கிராம், 500 மில்லி / கிராம் மற்றும் 1 லிட்டர், 2 லிட்டர், 3 லிட்டர், 4 லிட்டர், 5 லிட்டர், 15 லிட்டர் மற்றும் 20 லிட்டர் என்ற அளவுகளில் மட்டுமே இந்தியாவில் சமையல் எண்ணெய் விற்பனை செய்யப்படும். 700 கிராம், 850 கிராம், 900 கிராம் என்ற அளவுகளில் இனி சமையல் எண்ணெய் பாக்கெட்களில் விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
எனவே பொதுமக்களாகிய நாம் இனி கடைகளுக்கு சென்றால் இந்த குறிப்பிட்ட 9 அளவிலான பாக்கெட் அளவுகளில் மட்டுமே சமையல் எண்ணெய் கிடைக்கும். இந்த புதிய விதியை அமல்படுத்த உற்பத்தியாளர்கள் மற்றும் பேக்கிங் நிறுவனங்களுக்கு மத்திய அரசு மூன்று மாத அவகாசம் வழங்கி இருக்கிறது. பாமாயில் ,சோயா பீன் ஆயில், சூரிய காந்தி ண்ணெய், கடுகு எண்ணெய், நிலக்கடலை எண்ணெய், எள் எண்ணெய், அரிசி தவிடு எண்ணெய், பருத்தி விதை எண்ணெய் மற்றும் பல கலவை எண்ணெய்களுக்கு இந்த விதிகள் பொருந்தும்.
இந்த நிலையான பாக்கெட் அளவுகள் நடைமுறைக்கு வருவதால் நாடு முழுவதுமே ஒரே சீரான அளவில் எண்ணெய் விற்பனை செய்யப்படும் அது மட்டும் இல்லாமல் விலையை ஒப்பிடுவதில் நுகர்வோருக்கு ஏற்படும் குழப்பமும் குறையும் என மத்திய அரசு தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications

