கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரபலமான சுற்றுலா தளமான பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்தேறியது. இந்தத் தாக்குதலை நடத்திய பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. நடந்து முடிந்த தாக்குதலில் பலர் உயிர்விட்ட நிலையில், பாகிஸ்தானுடன் தனது உறவை இந்தியா முறித்துக் கொள்ளும் சூழல் நிலவி வருகிறது.
ஆரம்பக் கட்டமாக, இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் செய்ய பயன்படுத்தப்படும் பாதைகளான அட்டாரி மற்றும் வாகா எல்லைகள் தற்போது மூடப்பட்டுள்ளன. ஒருவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் முற்றிலுமாக முடிவுக்கு வந்தால், இந்தியாவில் சில பொருட்களின் விலை உயர்ந்ததாக மாறலாம். அவை என்னென்ன பொருட்கள் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

உலர்ந்த பழங்கள்: இந்தியாவுக்கு பெரும்பாலான நாடுகள் ஏற்றுமதி செய்கின்றன. இது அந்தந்தை நாடுகளில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களைப் பொறுத்து மாறுபடலாம். அப்படி பாகிஸ்தானிலிருந்து இந்தியா அதிக அளவிலான உலர் பழங்களை இறக்குமதி செய்கிறது. பாதாம், பிஸ்தா, ஆப்ரிகாட்ஸ் போன்ற உலர் பழங்கள் பாகிஸ்தானில் இருந்தும் இந்தியாவிற்கு வருகிறது.
பாகிஸ்தான் மட்டுமின்றி மற்ற நாடுகளில் இருந்தும் இந்தியாவுக்கு உலர் பழங்கள் வருகிறது. எனவே பாகிஸ்தானிடம் வர்த்தகத்தை முடித்துக் கொண்டால், இதுபோன்ற உலர் பழங்கள் விலை அதிகரிக்கும் வாய்ப்பு நிலவுகிறது.
கல் உப்பு: பாகிஸ்தானில் இருந்து இந்தியா கல் உப்பை வாங்குகிறது. இந்த வகையான உப்பு மத விழாக்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வர்த்தகம் நின்று போனால் கல் உப்பின் விலையும் அதிகரிக்கலாம்.
ஆப்டிகல் லென்ஸ்: பாகிஸ்தானில் இருந்து இந்தியா வாங்கும் மற்றொரு பொருள் ஆப்டிகல் லென்ஸ். கிட்டத்து பார்வை, தூரத்து பார்வை போன்ற கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கண்ணாடியில் வைப்பதற்கு இந்த ஆப்டிகல் லென்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒருவேளை பாகிஸ்தானுடன் வர்த்தக உறவு நின்றால் குறுகிய காலத்திற்கு இந்த லென்ஸ்களின் விலை உயரக்கூடும்.
மேல் கண்ட பொருட்கள் மட்டுமின்றி கற்கள், சுண்ணாம்பு, காட்டன், ஸ்டீல், ஆர்கானிக் கெமிக்கல், ரசாயனங்கள், லெதர் போன்றவற்றையும் பாகிஸ்தானில் இருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது. வர்த்தக உறவு துண்டிக்கப்பட்டால் அது இந்தியாவை விட பாகிஸ்தானுக்கு அதிகம் இழப்பை ஏற்படுத்தும்.
ஏனெனில் பாகிஸ்தான் ஏற்கனவே பொருளாதார மந்த நிலையைச் சந்தித்து வருகிறது. இந்தியா பாகிஸ்தானுக்கு ரசாயனம், மருந்து, பிளாஸ்டிக் பொருட்கள், பழங்கள், காய்கறிகள் தேநீர், காபி, மசாலா பொருட்கள், சர்க்கரை, பால் பொருட்கள், கால்நடை தீவனம் போன்ற பல பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.


Click it and Unblock the Notifications