டெல்லி: இந்தியா இந்த ஆண்டு சீனாவை விஞ்சி உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன சந்தையாக மாறும் என்று வெள்ளிக்கிழமை அன்று வெளியான கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் நிறுவன அறிக்கை தெரிவித்துள்ளது. வலுவான பொருளாதார வளர்ச்சி, குறுகிய தூர பயணங்களுக்கு டூ வீலர்களுக்கான நுகர்வோர் விருப்பம் ஆகியவை இந்தியா சீனாவை முந்திக்கொள்ள உதவும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மின்சார இருசக்கர வாகன சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. 2024-ஆம் ஆண்டு விற்பனையில் நான்கு சக்கர பயணிகள் மின்சார வாகனங்களை விட 1.5 மடங்கு அதிகமாக இருசக்கர வாகன விற்பனை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2023-ஆம் ஆண்டில் இரு சக்கர வாகன விற்பனை, அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. ஆனால் 2024-ஆம் ஆண்டில் மின்சார இருசக்கர வாகன பிரிவுதான் அதிக வளர்ச்சியைக் காணும். மேலும் விற்பனையாகும் டூ வீலர்களில் கால்வாசிக்கும் அதிகமானவை பேட்டரி மூலம் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய மூத்த ஆய்வாளர் சௌமென் மண்டல் கூறுகையில் இருசக்கர வாகன சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது, ஆனால் மின்சாரமயமாக்கலை அனைவரும் ஏற்றுக்கொள்வது குறிப்பாக 2025-ஆம் ஆண்டுக்கு பிறகு கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இந்தியா ஆகியவை மின்சார இருசக்கர வாகனங்களை முக்கியமாக ஏற்றுக்கொள்ளும் என்று அவர் கூறியுள்ளார்.
மின்சார 2 சக்கர வாகன பிராண்டுகளில் முதல் 10 இடங்களில், முதல் மூன்று மின்சார இருசக்கர வாகன பிராண்டுகள் இந்தியாவைச் சேர்ந்தவை. அவை ஓலா எலக்ட்ரிக், டிவிஎஸ் மோட்டார் மற்றும் ஏதர் எனர்ஜி ஆகியவை அடங்கும்.
உலகளாவிய டூ வீலர் விற்பனையில் மின்சார டூ வீலர் விற்பனையின் பங்கு 2030-ஆம் ஆண்டளவில் 44 சதவீதத்தை எட்டும். அதே நேரத்தில் மின்சார டூ வீலர் விற்பனை 2024-ஆம் ஆண்டு முதல் 2030-ஆம் ஆண்டுக்கு இடையில் 150 மில்லியன் யூனிட்களை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இருசக்கர வாகனங்களின் விற்பனை 2024-ஆம் ஆண்டில் இந்தியாவில் 35 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சீனா 34 சதவீதத்தை பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு சீனா 37 சதவீத வாகன விற்பனையுடன் முதலிடத்தில் இருந்தது. அப்போது இந்திய 32 சதவீத வாகன விற்பனையுடன் இருந்தது.


Click it and Unblock the Notifications