டெல்லி: இந்திய கடற்படைக்காக பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 26 ரபேல் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு பாதுகாப்பு படைகளை வலுப்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை கையில் எடுத்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாக பிரான்சிடம் இருந்து மேலும் 26 ரபேல் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே பிரான்சிடம் இருந்து அரசு ரபேல் விமானங்களை வாங்கி இருக்கிறது. அப்போது இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதன்படி இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரண்டு அரசுகளுக்கும் இடையே 26 ரபேல் மரைன் ஜெட் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 63 ஆயிரம் கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரபேல் விமானத்தை கொள்முதல் செய்வதற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள மிகப்பெரிய ஒரு தொகையாக இது பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் படி இந்திய கடற்படைக்கு பிரான்ஸ் அரசு ஒரு இருக்கை கொண்ட 22 ரபேல் போர் விமானங்களையும், இரண்டு இருக்கை கொண்ட 4 போர் விமானங்களையும் வழங்க இருக்கிறது. இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தரும் பிரெஞ்சு பாதுகாப்பு துறை அமைச்சர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஒப்பந்தம் கையெழுத்தான ஐந்து ஆண்டுகளுக்கு பின் பிரான்ஸ் அரசு படிப்படியாக விமானங்களை டெலிவரி செய்யும் என சொல்லப்படுகிறது. இந்திய கடற்படையின் விமானம் தாங்கி போர் கப்பல்களில் இருந்து ரபேல் விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஏற்கனவே 2016 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தின் கீழ் வாங்கப்பட்ட 36 ரபேல் ஜெட் விமானங்கள் இந்திய கடற்படையில் பயன்பாட்டில் இருக்கின்றன.
இந்த விமானம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தோடு இந்த விமானங்களின் பராமரிப்பு, அதனை பயன்படுத்தும் வீரர்களுக்கான பயிற்சி மற்றும் உள்ளிட்ட மற்ற சேவைகளையும் பிரான்ஸ் அரசு வழங்கும் என சொல்லப்படுகிறது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் புதிய ரபேல் விமானங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த ஒப்பந்தத்தின்படி புதிதாக ரபேல் விமானங்கள் வந்து சேர்ந்த உடன், கடற்படையில் பயன்பாட்டில் இருக்கும் விமானங்களில் 10 போர் விமானங்கள் வானத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டு தொடர்ச்சியாக பறக்கும் திறன் கொண்டவையாக மாறும். அதாவது எரிபொருளுக்காக அவை தரையிறங்க வேண்டிய அவசியம் இல்லாமல் தொடர்ந்து பயணிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் இந்திய கடற்படையை வலுப்படுத்தும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications