டெல்லி: இந்திய கடற்படையை வலுப்படுத்தும் நோக்கில் பிரான்ஸிடமிருந்து 26 ரபேல் கடற்படை ஜெட்டுகளை வாங்க இருப்பதாக இந்திய கடற்படை தளபதி அட்மைரல் தினேஷ் கே திரிபாதி தெரிவித்துள்ளார்.
தேசிய கடற்படை தினத்தை முன்னிட்டு டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கடற்படை தளபதி அட்மைரல் தினேஷ் கே திரிபாதி கடற்படையின் எதிர்கால திட்டங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டார். இதன்படி கடற்படையை வலுப்படுத்தும் விதமாக 26 ரபேல் மரைன் ஃபைட்டர் ஏர்கிராப்டுகளை இந்தியா வாங்க இருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக பிரான்ஸ் நாட்டு அரசிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கிட்டத்தட்ட ஒப்பந்தம் இறுதியாகும் நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இது இரு நாட்டு அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் என்பதால் விரைவிலேயே கையெழுத்து ஆகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி இரண்டு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை தயாரிப்பதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்திருப்பதாகவும் இது முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட இருப்பதாகவும் திரிபாதி கூறியுள்ளார். இந்திய கடற்படை நவீனமயமாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
தற்போதைக்கு 62 போர்க் கப்பல்கள் மற்றும் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவை இந்திய கடற்படைக்காக கட்டமைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அடுத்த ஓராண்டு காலத்தில் பல்வேறு கப்பல்கள் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட உள்ளன என்றும் அவர் உறுதி படக் கூறினார். முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட போர் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் பயன்படுத்துவதற்காக ரபேல் போர் விமானங்களை வாங்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அனுமதி தந்தது.
இதனை தொடர்ந்து பிரான்ஸ் அரசுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் தற்போது இறுதி கட்டத்தை கட்டியுள்ளன விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அவர் கூறினார். மேலும் பாகிஸ்தான் அரசு சீனாவின் உதவியோடு பல்வேறு போர்க்கப்பல்களையும் நீர்மூழ்கி கப்பல்களையும் கட்டமைத்து வருவது குறித்து கவலை தெரிவித்த அவர், சீனா அரசு பாகிஸ்தான் கடற் படையை வலுப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அரசு 8 புதிய நீர்மூழ்கி கப்பல்களை அண்மையில் வாங்கி இருப்பதையும் அவர் குறிப்பிட்டு பேசியிருக்கிறார் .பாகிஸ்தான் அரசு மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் ஆயுதங்களை வாங்குவதில் பணத்தை செலவு செய்கிறது என்றும் விமர்சனம் செய்தார். வரும் 4ஆம் தேதி பூரி நகரில் பிரம்மாண்ட சாகச நிகழ்ச்சிகள் கடற்படை சார்பாக நடத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications