அமெரிக்கா: இந்தியா தற்போது செமிகண்டக்டர் உற்பத்தியில் கவனம் செலுத்தி வரும் நிலையில் அதன் முக்கிய மைல்கல்லாக அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்துவது, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவது என்பன உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக அமெரிக்க கூட்டாண்மையுடன் இந்தியா தன்னுடைய முதல் தேசிய பாதுகாப்பு செமிகண்டக்டர் ஆலையை நிறுவுவது என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆலையில் தயாரிக்கப்படக்கூடிய செமிகண்டக்டர்கள் ராணுவ உபகரணங்களில் பயன்படுத்தப்படும் என்றும் அடுத்த தலைமுறை தொலைத்தொடர்பு சாதனங்களில் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா அமெரிக்க கூட்டாண்மையில் அமைய இருக்கும் முதல் செமிகண்டக்டர் ஆலை இதுவாகும். இந்த செமிகண்டக்டர் திட்டம் மிகச்சிறந்த ஒரு கூட்டாண்மை திட்டம் என இரு தலைவர்களும் பெருமிதம் தெரிவித்தனர். முதன்முறையாக அமெரிக்க ராணுவமானது ஒரு நாட்டுடன் இணைந்து அதிகபட்ச மதிப்பு கொண்ட ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது .
அந்த வகையில் அமெரிக்க ராணுவம் இந்தியாவோடு இணைந்து இந்தியாவில் பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட உபகரணங்களுக்கான செமிகண்டக்டர்களை உருவாக்க இருக்கிறது.
இது சிவில் நியூக்ளியர் ஒப்பந்தத்திற்கு அடுத்தபடியாக இரு நாடுகளுக்கு இடையே ஏற்படக்கூடிய மிக முக்கியமான ஒப்பந்தம் என சொல்லப்படுகிறது. இந்த செமிகண்டக்டர்கள் பசுமை எரிசக்தி சம்பந்தப்பட்ட திட்டங்களிலும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி infrared, gallium nitride மற்றும் silicon carbide செமிகண்டக்டர்கள் இங்கே தயாரிக்கப்பட உள்ளன.
மேலும் இந்தியாவிலேயே இது முதல் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட செமிகண்டக்டர் ஆலை என்பது மட்டுமில்லாமல் உலக அளவில் இரண்டு நாடுகள் இணைந்து செயல்படுத்தும் ஒரு செமிகண்டக்டர் ஆலையாக இருக்கும்.
கொல்கத்தாவில் இந்த ஆலை நிறுவப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி பாதுகாப்பு துறைக்கு தேவையான செமிகண்டக்டர்கள் குறித்த ஆராய்ச்சியிலும் அமெரிக்க ராணுவம் இந்தியாவுக்கு உதவி செய்ய இருக்கிறது.
இந்த திட்டம் முழுமை பெறும் போது மக்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் கருவிகளுக்கான செமிகண்டக்டர் உற்பத்தியோடு மட்டுமில்லாமல் ராணுவத்திற்கு தேவையான செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்யும் நாடாகவும் இந்தியா உருவாகும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications