உலக அளவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் முன்னணி நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. ஆதார், யுபிஐ, ஈ காமர்ஸ், ஸ்டார்ட் அப்கள் என பல்வேறு பிரிவுகளின் வளர்ச்சிக்கும் இந்த டிஜிட்டல் தொழில்நுட்பமும் அது சார்ந்த உள்கட்டமைப்புகளும் மிக முக்கியமானதாக இருக்கிறது .
இந்தியாவின் இந்த டிஜிட்டல் மாற்றத்திற்கு அடிப்படை தேவையாக இருப்பவை டேட்டா சென்டர் எனப்படும் தரவு மையங்கள். 5ஜி, ஏஐ, மெஷின் லேர்னிங், சைபர் செக்யூரிட்டி, இன்டர்நெட் ஆப் திங்ஸ் உள்ளிட்ட பல்வேறு வேகமாக வளர்ந்து வரக்கூடிய தொழில்நுட்பங்களுக்கும் தேவையான ஸ்டோரேஜ் மற்றும் ப்ராசசிங் திறன்களை வழங்குபவை தான் இந்த டேட்டா சென்டர்கள்.

மத்திய அரசை பொருத்தவரை இந்த டேட்டா சென்டர்கள் விரிவாக்கத்தில் மிக தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. அரசு அடுத்த 20 ஆண்டுகள் வரை இந்தியாவில் டேட்டா சென்டர்களை டெவலப் செய்யும் நிறுவனங்களுக்கு முழுவதுமாக வரி விலக்கு தருவதற்கு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மத்திய அரசின் தேசிய தரவு மைய கொள்கையில் இந்த அம்சம் இடம் பெற்றிருப்பதாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
இந்த கொள்கையின் வரைவானது தற்போது பல்வேறு தரப்பினரின் கருத்து கேட்பதாக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. உலகின் மிகப்பெரிய கிளவுட் உள்கட்டமைப்பு , ஏஐ மாடலிங் மற்றும் டிஜிட்டல் சேவைகளின் மையமாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பதில் அரசு முனைப்பு காட்டி வரக்கூடிய நிலையில் அவற்றுக்கு இத்தகைய டேட்டா சென்டர்களின் தேவை மிகவும் அவசியம் .
டேட்டா சென்டர்களுக்காக உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த கொள்கையில் அரசு குறிப்பிடும் திறன்களை எட்டக்கூடிய தரவு மையங்களுக்கு முதல் 20 ஆண்டுகளுக்கு எந்தவித வரியும் இல்லை என்ற சிறப்பு சலுகை கொண்டுவரப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது . தரவு மையங்களை அமைக்கக்கூடிய நிறுவனங்கள் தங்களுடைய ஏஐ மேம்பாட்டு மையங்களையும் எளிமையாக நிறுவுவதற்கான அனுமதி வழங்குவது என்பன உள்ளிட்ட அம்சங்கள் இந்த கொள்கையில் இடம் பெற்று இருக்கின்றன .
ஏஐ , கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் சைபர் செக்யூரிட்டி பிரிவில் இந்தியாவை முன்னணி நாடாக கொண்டு வர வேண்டும் என்ற நம்பிக்கையில் அரசு இந்த கொள்கையை வகுத்துள்ளது. இதன் மூலம் நவீன தொழில்நுட்பத்தில் பல ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அரசு நம்புகிறது.
2019 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் டேட்டா மையங்கள் ஆண்டுக்கு 24 சதவீதம் என்ற விதத்தில் வளர்ச்சி அடைந்து வருகின்றன . ஏனெனில் இந்தியாவில் டேட்டா மையங்களுக்கான தேவையும் அந்த அளவுக்கு அதிகரித்து இருக்கிறது. இவ்வாறு டேட்டா மையங்களை அமைப்பதற்கு முறையான நிலங்கள் கிடைப்பதையும் அவற்றுக்கு தேவையான மின்சார வசதி கிடைப்பதையும் உறுதி செய்வதற்கு அரசு பெரிய அளவில் திட்டமிட்டு வருவதும் இது குறித்து மாநில அரசுகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருதாக சொல்லப்படுகிறது.ஏற்கனவே அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட் ஆகியவை இந்தியாவில் டேட்டா சென்டர்களை அமைத்துள்ளன. இந்த கொள்கை நடைமுறைக்கு வந்தால் அவை மேலும் விரிவாக்கம் செய்யப்படும் .


Click it and Unblock the Notifications