இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு என்ன பலன்? இந்தியாவில் எந்தெந்தப் பொருட்கள் விலை குறைய வாய்ப்புள்ளது என தெரிந்து கொள்ளலாம்.
இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே நீண்ட ஆண்டுகளாக தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்தது. இறுதியாக கடந்த ஆண்டில் தான் இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையிலும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நாடுகளின் வர்த்தகத்தை எளிதாக்குவதும், இறக்குமதி வரி விகிதங்களை குறைப்பதும் தான் இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம். இதன்படி, பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களின் மீதான வரி குறைக்கப்படுவதால், சாமானிய மக்களுக்கு பல்வேறு பொருட்களும் இனி குறைந்த விலையில் கிடைக்க போகிறது.

நுகர்வோர் பொருட்கள் : சாக்லேட்டுகள் மற்றும் இனிப்பு பிஸ்கட்டுகள், குளிர் பானங்கள் , அழகுசாதனப் பொருட்கள் , வாசனை திரவியங்கள் , சோப்பு மற்றும் நெயில் பாலிஷ், சால்மன் மீன் மற்றும் ஆட்டிறைச்சி போன்ற பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை இந்தியாவில் இனி குறைய போகிறது.
கார்கள் மற்றும் வாகனங்கள் : பிரிட்டனில் இருந்து முழுமையாக தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் லாரிகளின் மீதான இறக்குமதி வரி, தற்போதுள்ள 110%இல் இருந்து படிப்படியாக 10% ஆகக் குறைக்கப்பட உள்ளது. இதன் காரணமாக ரோல்ஸ் ராய்ஸ், ஆஸ்டன் மார்ட்டின், மெக்லாரன் , ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் போன்ற சொகுசு கார் கார்களின் விலை குறையும். முதலில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் விலையும் 6 ஆண்டுகளுக்கு பின்னர் எலக்ட்ரிக், ஹைப்ரிட் மற்றும் ஹைட்ரஜன் வாகனங்களுக்கும் வரிச்சலுகை பொருந்தும்.
மதுபானங்கள் : ஸ்காட்ச் விஸ்கிக்கான இறக்குமதி வரி 150%லிருந்து 75%ஆக உடனடியாக குறைக்கப்படும். இது அடுத்த 10 ஆண்டுகளில் 40%ஆகக் குறைக்கப்படும் என்பதால் மதுப்பிரியர்களுக்கு குறைந்த விலையில் வெளிநாட்டு மதுபானம் கிடைக்கும். ஜின், பிராந்தி, ரம், வோட்கா, மற்றும் டெக்கீலா போன்றவற்றின் மீதான வரி, தற்போதுள்ள 150%லிருந்து படிப்படியாக 75% வரை குறைக்கப்பட உள்ளது.
மருத்துவ உபகரணங்கள்: அறுவை சிகிச்சை கருவிகள், எக்ஸ்-ரே இயந்திரங்கள் மற்றும் இசிஜி கருவிகள் போன்ற மருத்துவ உபகரணங்களின் மீதான வரி குறைக்கப்படுவதால், சுகாதார துறையில் செலவுகள் குறைய வாய்ப்புள்ளது.
வெள்ளி: பிரிட்டனில் இருந்து இந்தியா அதிகளவில் இறக்குமதி செய்யும் உலோகம் வெள்ளி. இதன் மீதான இறக்குமதி வரி, 10 ஆண்டுகளில் படிப்படியாக பூஜ்ஜியமாக குறைக்கப்படும் என்பதால் அதன் விலையும் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கும் கொண்டாட்டம். இந்தியாவின் 99% ஏற்றுமதி பொருட்களுக்கு பிரிட்டனில் வரி இல்லாத சந்தை வாய்ப்பு கிடைக்கிறது. இது ஜவுளி, தோல் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுத் துறைகளுக்கு பெரும் ஊக்கமாக இருக்கும். ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள்,பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள், ரசாயனங்கள் மற்றும் மருந்துகள், பொறியியல் பொருள்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இந்த ஒப்பந்தம் மூலம் பிரிட்டனின் சந்தை வாய்ப்புகளை பெற்றுள்ளன.
அதே போல 137 சேவை துறைகளில் இந்திய நிறுவனங்களுக்கு பிரிட்டன் சந்தை திறக்கப்பட்டுள்ளது. இதனால், தகவல் தொழில்நுட்பம், நிதி சேவைகள், பொறியியல், மருத்துவம், கல்வி, தொலைத்தொடா்பு, ஆலோசனை சேவைகள் ஆகிய துறைகளில் செயல்படும் இந்திய நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும்.


Click it and Unblock the Notifications

