இந்தியாவின் எரிசக்தி தேவையை பாதுகாப்பதில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் விதமாக, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஒரு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவிடம் இருந்து திரவ பெட்ரோலிய வாயுவை (LPG) இறக்குமதி செய்வதற்கான வரலாற்று சிறப்புமிக்க ஒரு ஒப்பந்தத்தை இந்தியா போட்டுள்ளது. மக்களுக்கு மலிவான விலையில் LPG கிடைப்பதை உறுதி செய்ய, நமது நாடு தொடர்ந்து மற்ற நாடுகளிடம் இருந்து எரிவாயு வாங்கும் வழிகளைப் பல்வகைப்படுத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முதன்முறையாக அமெரிக்காவுடன் நேரடி ஒப்பந்தம் : இந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் (IOCL, BPCL, HPCL) 2026 ஆம் ஆண்டுக்கான ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்காவின் வளைகுடா கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 2.2 மில்லியன் டன் (22 லட்சம் டன்) எல்.பி.ஜி-யை ஓராண்டுக்கு இறக்குமதி செய்ய உள்ளன. இது, இந்தியா ஆண்டுதோறும் இறக்குமதி செய்யும் எல்.பி.ஜி. அளவில் கிட்டத்தட்ட 10 சதவீதத்திற்கு சமமாகும். மிக முக்கியமாக, இந்திய சந்தைக்காக அமெரிக்க LPG-யுடன் போடப்படும் முதல் கட்டமைப்பு ரீதியான நீண்ட கால ஒப்பந்தம் இதுவாகும். இது இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை திறந்துள்ளது.

அமைச்சர் பூரி தனது சமூக வலைதளப் பதிவில், "உலகின் மிகப் பெரிய எல்.பி.ஜி. சந்தைகளில் ஒன்றான இந்தியா, இப்போது அமெரிக்காவுக்காக திறக்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று சாதனை. மக்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பான மற்றும் மலிவான எல்.பி.ஜி. விநியோகத்தை உறுதி செய்யவே இந்த பல்வகைப்படுத்தலை செய்கிறோம்" என்று தெரிவித்தார்.
மானியம் : மலிவான விலையில் எல்.பி.ஜி சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்வதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக அமைச்சர் பூரி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், பொதுத்துறை நிறுவனங்கள் உலகிலேயே மிக குறைந்த விலையில் LPG-ஐ வழங்குவதை உறுதி செய்வதாக அவர் கூறினார்.
சர்வதேச சந்தையில் எல்.பி.ஜி. விலைகள் கடந்த ஆண்டு 60%-க்கும் அதிகமாக உயர்ந்தபோதும் கூட, ஒரு சிலிண்டரின் உண்மையான விலை ரூ.1,100-ஐ தாண்டிய போதும், பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் உஜ்வாலா பயனாளிகள் ரூ.500 முதல் ரூ.550 வரை மட்டுமே சிலிண்டரை பெற்றனர்.
சர்வதேச விலை உயர்வு சுமை பொதுமக்களை பாதிக்காமல் இருக்க, மத்திய அரசு கடந்த ஆண்டு மட்டும் ரூ.40,000 கோடிக்கும் அதிகமான தொகையை மானியமாக ஏற்றுக் கொண்டது" என்று அவர் விளக்கினார். இதன் மூலம், எரிசக்திப் பாதுகாப்பும், விலை கட்டுப்பாடும் உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications