இந்தியா - அமெரிக்க மத்தியிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு விதித்த வரியை 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைத்தது. இதேபோல் இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கும் வரி மற்றும் வரி அல்லாத தடைகளை படிப்படியாக குறைத்து பூஜ்ஜியத்துக்கு கொண்டு செல்லும் என டிரம்ப் தனது டிவீட்டில் தெரிவித்தார்.
இந்த பதிவு வெளிப்படையான விவபரத்தை மட்டுமே தெரிவித்துள்ளது, இந்த ஒப்பந்தத்தில் இருக்கும் பல்வேறு விஷயங்கள் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை. இப்படி இந்தியாவின் விவசாயம் மற்றும் பால்வள துறையில் அமெரிக்க இறக்குமதிகள் குறித்து மத்திய அரசு வெளிப்படையாக பேசவில்லையோ, அதேபோல் அமெரிக்காவும் எஃகு, அலுமினியம், செம்பு போன்ற பிரவுகளில் இருக்கும் கட்டுப்பாடுகள் குறித்து பேசவில்லை.

இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், எஃகு, அலுமினியம், செம்பு போன்ற முக்கிய துறைகளுக்கு அமெரிக்காவின் கடுமையான வரி தொடரும் என்று தெரியவந்துள்ளது. இந்த ஒப்பந்தம் பல துறைகளுக்கு வரி குறைப்பை கொண்டு வந்தாலும், சில முக்கிய பொருட்களுக்கு வரி தடைகள் அகற்றப்படவில்லை.
அமெரிக்காவின் செக்ஷன் 232 விதிகளின் கீழ் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம், காப்பர் ஆகியவற்றுக்கு சுமார் 50 சதவீத வரி FTA ஒப்பந்தம் பின்பும் தொடரும். இந்த வரிகள் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களால் நீக்கப்படுவதில்லை, இதேபோல் இந்தியாவுக்கு மட்டுமில்லை மற்ற நாடுகளுக்கும் இதே கட்டுப்பாடுகள் நிலவுகிறது. இதனால் இந்த துறைகளில் உள்ள இந்திய ஏற்றுமதியாளர்கள் FTA ஒப்பந்தம் கையெழுத்தான பின்பும் அதிகப்படியான வரி சுமையை சந்திக்க வேண்டியுள்ளது.
இதுமட்டுமா சில முக்கிய ஆட்டோமொபைல் உதிரிபாகங்களுக்கும் 25 சதவீத வரி தொடரும். இது ஆட்டோமொபைல் துறையில் உள்ள சில இந்திய உற்பத்தியாளர்களுக்கு சவாலாக அமையும். இந்த வரி தொடர்வது இந்திய ஏற்றுமதியாளர்களின் அமெரிக்க சந்தை போட்டித்தன்மையை பாதிக்கும் என்று தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
மறுபுறம், மருந்துகள், விமானங்கள் மற்றும் விமான பாகங்கள், ஸ்மார்ட்போன்கள், சில இயந்திர மற்றும் எலக்ட்ரானிக் உதிரிபாகங்கள் ஆகியவற்றுக்கு ஜீரோ வரி நடைமுறைக்கு வரும். இது இந்த துறைகளில் உள்ள இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் நன்மை அளிக்கும்.
இந்த ஒப்பந்தம் பல துறைகளுக்கு வரி நிவாரணம் அளித்தாலும், எஃகு மற்றும் அலுமினியம் போன்ற அடிப்படை தொழில்களுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை.
FTA ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் அமெரிக்கா எப்படி எஃகு, அலுமினியம், செம்பு ஆகிய பிரிவுகளை தனி வரி சட்டத்தின் கீழ் காத்துள்ளதோ, அதேபோல் இந்தியாவும் விவசாய துறை மற்றும் பால்வள துறையை பாதுக்காக்க வேண்டும். காரணம் இவ்விரு துறையிலும் பெரிய நிறுவனங்களை காட்டிலும், சாமானிய மக்கள் தான் அதிகளவில் நேரடியாக வர்த்தகம் செய்து வருகின்றனர். எனவே இவ்விரு துறையிலும் இருக்கும் கோடிக்கணக்கான மக்களின் வருமானத்தை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications