அமெரிக்க அதிபராக கடந்த ஆண்டு பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதித்தார். இதனை அடுத்து பல்வேறு நாடுகளும் அமெரிக்காவோடு வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கு முன் வந்தன.
இந்தியாவும் அமெரிக்காவோடு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இந்த பேச்சு வார்த்தைகள் ஒருபுறம் இருக்கும்போதே டிரம்ப் நிர்வாகம் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரியை விதித்து இந்தியாவை சீண்டிப் பார்த்து வருகிறது. இருந்தாலும் மறுபுறம் அமெரிக்கா இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்ற வண்ணம் தான் இருக்கிறது. ஆனால் இதுவரை அதில் ஒரு உடன்பாடு எட்டப்படவில்லை.

பல மாதங்களாக இருதரப்பு அதிகாரிகளும் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சில விஷயங்களில் இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படாமல் இருக்கிறது. அமெரிக்க அரசு தங்கள் நாட்டு வேளாண் பொருட்களை இந்திய சந்தையில் அனுமதிக்க கேட்கிறது ஆனால் இது இந்திய விவசாயிகளை பாதிக்கும் என்பதால் மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் வர்த்தக ஒப்பந்தம் தொடர்ந்து தாமதமாகி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இப்படி இழுபறியாக இருப்பது இந்தியாவை சேர்ந்த ஏற்றுமதி துறை சார்ந்த இயங்கக்கூடிய தொழில்களுக்கும் இந்திய பங்குச் சந்தைகளுக்கும் பெரிய பாதகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எப்போது இந்த வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என இவர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் லுட்னிக் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் தயாராகிவிட்டது அது இறுதியாக வேண்டும் என்றால் பிரதமர் மோடி அதிபர் டிரம்பிடம் போனில் பேச வேண்டும் என கூறியிருக்கிறார். மோடி, டிரம்பிடம் போனில் பேசாமல் இருப்பதே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் இருப்பதற்கான காரணம் என அவர் கூறியிருக்கிறார்.
மோடி அதிபர் டிரம்புடன் போனில் பேச வேண்டும் இதற்கான நேரம் நாள் குறித்து இந்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டது, மூன்று வெள்ளிக்கிழமைகள் கால அவகாசம் ஒதுக்கப்பட்டன ஆனால் இந்தியா அதை ஏற்க மறுத்தது எனக் கூறியிருக்கிறார். இதனால் இந்தியாவை விட வர்த்தக ஒப்பந்த பேச்சு வார்த்தையில் பின்தங்கி இருந்த வியட்நாம் , இந்தோனேசியா ஆகிய நாடுகள் முன் சென்று ஒப்பந்தம் ஏற்படுத்தி விட்டன என அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இந்த ஒப்பந்தம் அதிபர் டிரம்ப் உடையது அவர்தான் ஒப்பந்தம் ஏற்படுத்துகிறார். மோடி மட்டும் அவரிடம் பேசிவிட்டால் போதும் ஆனால் அவர் அதை செய்யாமல் இருக்கிறார். இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கான கதவுகள் இன்னும் திறந்துதான் இருக்கின்றன என லுட்னிக் தெரிவித்திருக்கிறார். பிரிட்டன் உடனான வர்த்தக பேச்சுவார்த்தையிலும் இதே சூழல் தான் நிலவியது. ஆனால் உடனடியாக அந்த நாட்டு பிரதமர் டிரம்ப் உடன் போனில் பேசி ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார் என தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications